விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை–பணம் அபேஸ் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை–பணம் அபேஸ் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 15 April 2017 11:51 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை–பணத்தை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி ஜெயம்மாள் (வயது 80). இவருடைய மகன்கள் மற்றும் மகள்கள் வெளியூரில் உள்ளனர். இவர் மட்டும் மதுரப்பாக்கத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 35 வயதுடைய 2 வாலிபர்கள் ஜெயம்மாளின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், ஜெயம்மாளிடம் சென்று நாங்கள் இருவரும் ஒரு பார்சல் நிறுவனத்தில் இருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவருக்கு பார்சலில் விலை உயர்ந்த பொருட்கள் பரிசாக வந்திருப்பதாகவும், அதற்கு பணம் தருமாறும் கேட்டனர்.

நகை– பணம் அபேஸ்

அதற்கு ஜெயம்மாள் தன்னிடம் ரூ.1,500 மட்டுமே உள்ளதாகவும், வேறு பணம் இல்லை என்றும் கூறினார். அப்படியானால் வீட்டில் ஏதேனும் நகை இருந்தால் கொடுக்குமாறும் தாங்கள் இருவரும் அந்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்வதாகவும் கூறினார்கள்.

இதை நம்பிய ஜெயம்மாள், வீட்டில் இருந்த 4½ பவுன் நகையையும் மற்றும் ரூ.1,500–யும் அந்த வாலிபர்களிடம் கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் பார்சல் பொருட்களை எடுத்துக்கொண்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து நைசாக சென்று விட்டனர். நீண்ட நேரமாகியும் அந்த வாலிபர்கள் வராததால் தன்னிடம் நூதன முறையில் பேசி நகை, பணத்தை அபேஸ் செய்திருப்பதை அறிந்து ஜெயம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story