மதுக்கடையை அகற்றக்கூடாது என வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு
ஈரோடு அருகே மதுக்கடையை அகற்றக்கூடாது என வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி லட்சுமி நகர் ஆலமரத்து பஸ் நிறுத்தம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்த கடையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் தாசில்தார் குணசேகரனை ஆலமரத்து பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், மயிலம்பாடி ஊராட்சி லட்சுமி நகர் ஆலமரத்து பஸ் நிறுத்தம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்து உள்ளதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். அதற்கு காரணம் என்னவென்றால் மயிலம்பாடி எல்லையில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளோம். எனவே இங்கு அமைக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டாம், என கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ‘இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்’ என்று கூறினார்.