தூத்துக்குடியில் பட்டப்பகலில் துணிகரம் பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


தூத்துக்குடியில் பட்டப்பகலில் துணிகரம்  பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 April 2017 1:30 AM IST (Updated: 15 April 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்து, பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்து, பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

தங்க சங்கிலி பறிப்பு

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த மணி மனைவி வேலம்மாள் (வயது 65), பால் வியாபாரி. இவர், நேற்று காலையில் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கண் இமைக்கும் நேரத்தில் வேலம்மாள் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேலம்மாள் சத்தம் போட்டார். அதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காமிராக்களில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்

இந்த நிலையில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் (20), ராமலட்சுமணன் (22), சுப்பிரமணியன் (19) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story