கூடலூர், கீழ்நாடுகாணி, பந்தலூர் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க மக்கள் தொடர் எதிர்ப்பு
கூடலூர், கீழ்நாடுகாணி, பந்தலூர் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கூடலூர்,
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கூடலூர் அருகே உள்ள நாடுகாணி டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது. தற்போது வேறு இடத்தில் மதுக்கடையை கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாடுகாணி அருகே கேரளா செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடுகாணி கிராமத்தில் தனியார் தங்கும் விடுதி கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடைடியை திறக்க முயற்சி செய்யப்பட்டது. இதை அறிந்த கிராம மக்கள் டாஸ்மாக் மதுக்கடையை திறந்தால் பெண்கள், மாணவிகளுக்கு இடையூறு ஏற்படும் என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
கடையை இடித்ததாக 2 பேரிடம் விசாரணைஇந்த நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக் கடையை திறக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் சம்மதிக்க வில்லை. இதனால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலர் இரவில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த கட்டிடத்தின் ஒருபகுதியை இடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த கூடலூர் எம்.எல்.ஏ திராவிடமணி கீழ்நாடுகாணி கிராமத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள், கேரள எல்லையில் டாஸ்மாக் கடை வைப்பதால் சுற்றுலாவுக்கு வருபவர்கள் மது குடித்து விட்டு இடையூறு செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மாவோயிஸ்டு தடுப்பு திட்டத்தின் கீழ் இக்கிராமத்தை போலீசார் தத்தெடுத்து உள்ளனர். எனவே டாஸ்மாக் மதுக் கடையை எந்த காரணத்தை கொண்டு திறக்க விட மாட்டோம் என தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
இதற்கிடையில் கீழ்நாடுகாணியில் தனியார் கட்டிடத்தை இடித்ததாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர், பந்தலூரில் தொடர் எதிர்ப்பு
இதேபோல் கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மதுபானங்களை கொண்டு வர உள்ளதாக தகவல் பரவியது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விடியற்காலை 2 மணி வரை அப்பகுதி மக்கள் காத்து கிடந்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பந்தலூர்பந்தலூரில் இருந்து கூவமூலா செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை திறக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 10 மணிக்கு அப்பகுதி மக்கள் திரண்டனர். மேலும் டாஸ்மாக் மதுக்கடை திறக்க உள்ள இடத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை உரிமையாளர் மதுக்கடை வைக்க அனுமதி இல்லை என மறுத்து விட்டார். இதனால் அங்கு மதுக் கடை நடத்த வாய்ப்பு இல்லை என மக்களிடம் போலீசார் கூறியதால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.