ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் அள்ளிய போது மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு


ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் அள்ளிய போது மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 16 April 2017 4:45 AM IST (Updated: 16 April 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் அள்ளிய போது மண் சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 45). இவர், பாலாற்றில் மாட்டு வண்டிகளில் முறைகேடாக மணல் அள்ளுபவர்களிடம் மணல் அள்ளித்தரும் கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலாயுதம் பெரியகொம்மேஸ்வரம் பாலாற்றில் மணல் அள்ள சென்றார்.

பாலாற்றில் முறைகேடாக மணல் அள்ளியதால் ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்களாக காணப்படுகிறது. அத்தகையை பள்ளங்களில் இறங்கி பள்ளம் வெட்டியும், இருபள்ளங்களுக்கு இடையே பக்கவாட்டில் சுரங்கம்போல் தோண்டியும் மணல் அள்ளி வந்துள்ளனர். மணல் அள்ளிக்கொண்டிருந்தபோது திடீரென மண் சரிந்து விழுந்ததில் பள்ளத்தில் இருந்த வேலாயுதம் மணலில் சிக்கினார். அவருடன் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் வேலாயுதம் பிணமாக மீட்கப்பட்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இது எங்கள் எல்லை இல்லை என்றும் உமராபாத் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என கூறினர். அதைத்தொடர்ந்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே வேலாயுதம் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர். ஆனால் இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராஜன் உத்தரவின்பேரில், உமராபாத் போலீசார் வேலாயுதத்தின் வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story