அரசு பள்ளியில் தீ விபத்து; ரூ.35 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்


அரசு பள்ளியில் தீ விபத்து; ரூ.35 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 16 April 2017 3:45 AM IST (Updated: 16 April 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே வாலாஜாநகரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் பழைய பொருட்கள் எரிந்து நாசமாகின.

தாமரைக்குளம்,

அரியலூர் அருகே உள்ள வாலாஜாநகரத்தில் ஈ.வே.ரா. அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள ஓட்டு கட்டிட அறையில் மாணவர்களுக்கு கொடுப்பதற்காக புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

புத்தகங்கள் எரிந்து நாசம்

இந்நிலையில் நேற்று புத்தகங்கள், நோட்டுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீடீர் என தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் அறையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் பழைய பொருட்கள் அனைத்தும் எரிய தொடங்கின. இது குறித்து பொது மக்கள் உடனடியாக அரியலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுப்பிரமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மேலும் கூடுதலாக ஒரு சிமெண்டு ஆலையில் இருந்தும் தீயை அணைக்க ஒரு தீயணைப்பு வண்டி வந்தது. நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து அரியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story