சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆதிதிராவிடர் அமைப்பினர் சாலைமறியல் மந்திரி யு.டி.காதர் பேச்சுவார்த்தை


சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆதிதிராவிடர் அமைப்பினர் சாலைமறியல்  மந்திரி யு.டி.காதர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 16 April 2017 2:00 AM IST (Updated: 16 April 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகரில், அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவில்லை என்று குற்றம்சாட்டி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆதிதிராவிடர் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகரில், அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவில்லை என்று குற்றம்சாட்டி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆதிதிராவிடர் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மந்திரி யு.டி.காதர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

சாலைமறியல்

சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை மாவட்ட நிர்வாகம் முறையாக கொண்டாடவில்லை எனக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆதிதிராவிடர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று சுற்றுலா மாளிகை அருகில் இருந்து அம்பேத்கர் உருவப்படத்துடன் புவனேஷ்வரி சர்க்கிள் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் புவனேஷ்வரி சர்க்கிளில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

விமரிசையாக கொண்டாட...

இந்த சம்பவம் குறித்து அறிந்த சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி யு.டி.காதர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவில்லை என்று குற்றம் சாட்டினர்.

அப்போது பேசிய யு.டி.காதர் இந்த மாதம் இறுதிக்குள்ளாக அரசு சார்பில் மறுபடியும் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story