‘சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
கோவை மாவட்டத்தில் சீராக குடிநீர் வினியோகம் செயய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
கோவை,
கோடை காலத்தில் கோவை மாவட்டம் முழுவதும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்– அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து திட்டங்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 162 வருடங்களுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்டது. அதுபோன்ற வறட்சி இப்போதும் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்பில்லூர் அணை, பவானி ஆற்று நீர், ஆழியார் ஆற்றுநீர், சிறுவாணி அணை ஆகிய நீர் ஆதாரங்கள் மூலம் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வறட்சி காலத்திலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2048–ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, பில்லூர் அணையை ஆதாரமாக கொண்டு மேலும் ஒரு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் காந்திபுரம் மேம்பாலப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழிப்புணர்வுகோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும், கோவை மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதற்கான விழிப்புணர் வை ஏற்படுத்த மாநகராட்சி பகுதியில் உள்ள தியேட்டர்கள், உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி மூலமும், வாகனங்கள் மூலமும் பிரசாரம் செய்ய வேண்டும். வீதிவீதியாக சென்று துண்டுப்பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.