வாயில் புண் குணமானதால் குட்டியானை வனப்பகுதியில் விடப்பட்டது வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு


வாயில் புண் குணமானதால் குட்டியானை வனப்பகுதியில் விடப்பட்டது வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே பிடிபட்ட குட்டியானைக்கு வாயில் புண் குணமானதால் வனப்பகுதியில் விடப்பட்டது. அதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த நிலையில், கோவை அருகே உள்ள மாங்கரை வனப்பகுதியில் வாயில் புண்ணுடன் ஒரு குட்டியானை சுற்றித்திரிந்தது.

உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட அந்த குட்டி யானை அங்குள்ள வீடுகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அட்டகாசம் செய்தது. 4 வயதான அந்த குட்டியானையை வனத்துறையினர் பிடித்து சாடிவயல் முகாமுக்கு கொண்டு சென்று கால்நடை மருத்து வர் மனோகரன் மேற்பார்வையில் சிகிச்சை அளித்தனர். மேலும் அந்த குட்டியானையின் உடல் நிலையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

குணமானது

இந்த நிலையில் குட்டியானைக்கு வாயில் இருந்த புண் முற்றிலும் குணமானது. எனவே வனத்துறையினர் குட்டியானையை வனப்பகுதியில் விட முடிவு செய்தனர்.

இது குறித்து கோவை மண்டல வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின்பேரில், மாவட்ட வன அதிகாரி ராம சுப்பிரமணியம் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் மனோகரன், வனச்சரக அதிகாரிகள் தினேஷ்குமார் (போளுவாம்பட்டி), முத்துகிருஷ்ணன் (காரமடை) மற்றும் வனத்துறையினர் அந்த குட்டியானையை நேற்று முன்தினம் சாடிவயல் முகாமில் இருந்து லாரியில் ஏற்றி காரமடை வனச் சரகத்துக்கு உட்பட்ட பில்லூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

வனப்பகுதியில் விட்டனர்

பின்னர் அந்த குட்டியானையை சுரண்டி என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் பசுந்தழைகள் உள்ள இடத்தில் வனத்துறையினர் விட்டனர். லாரியில் இருந்து அந்த குட்டியானை இறங்கியதும், துதிக்கையால் மண்ணை தூக்கி தனது மீது போட்டபடி வனப்பகுதியை நோக்கி சென்றது. ஆனாலும் வனத் துறையினர் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியே வருகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்தனர்.

ஊருக்குள் புகுந்தது

இந்த நிலையில் வனப்பகுதிக்குள் விடப்பட்ட குட்டியானை காரமடை வனச்சரகத்திற்கு குண்டூர் மலை கிராமத்தில் நேற்று சுற்றித் திரிந்தது. அத்துடன் அது வெள்ளியங்காடு– அன்சூர் சோதனைச்சாவடி அருகே உள்ள பூமாதேவி நகரில் தனியார் தோட்டத்தில் புகுந்தது.

இது குறித்த தகவலின்பேரில் காரமடை வனத்துறையினர் விரைந்து சென்று அந்த குட்டியானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அது வனப்பகுதிக்குள் சென்றுவிட்டாலும், மீண்டும் வெளியே வர வாய்ப்பு இருப்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம் கூறியதாவது:–

கண்காணிப்பு

வனப்பகுதியில் விடப்பட்ட குட்டியானை யானை கூட்டத்துடன் சேர்ந்துவிட்டதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க யானை பாதுகாப்பு படை மற்றும் வேட்டை தடுப்பு காவலர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் என்பதால், கண்டிப்பாக குட்டியானை, காட்டு யானை கூட்டத்துடன் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வனப்பகுதியில் விடப்பட்ட குட்டியானை மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story