உப்பள்ளியில், வியாபாரியின் வீடு உள்பட 2 பேரின் வீடுகளில் ரூ.3.85 லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு
உப்பள்ளியில் வியாபாரியின் வீடு உள்பட 2 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.3.85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
உப்பள்ளி,
உப்பள்ளியில் வியாபாரியின் வீடு உள்பட 2 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.3.85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வியாபாரிஉப்பள்ளி உபநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆசினியாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்லே அகமது. வியாபாரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. அனைத்து அறைகளின் கதவுகளும் திறந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 75 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.23 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டுப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2.60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பரபரப்புஇதேபோல், உப்பள்ளி லைநிக் நகர் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். இந்த 2 சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.3.85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் திருட்டுப்போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் உப்பள்ளி உபநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். உப்பள்ளியில் ஒரேநாளில் இருவேறு இடங்களில் வியாபாரி வீடு உள்பட 2 பேரின் வீடுகளில் நகைகள் மற்றும் பணம் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.