காங்கேயம் பகுதியில் கடுமையான வறட்சி: ஆழ்குழாய் கிணறுகளில் 1200 அடி வரை தண்ணீர் இல்லை


காங்கேயம் பகுதியில் கடுமையான வறட்சி: ஆழ்குழாய் கிணறுகளில் 1200 அடி வரை தண்ணீர் இல்லை
x
தினத்தந்தி 16 April 2017 4:00 AM IST (Updated: 16 April 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக தென்னை மரங்களை காப்பாற்ற அமைக்கும் புதிய ஆழ்குழாய் கிணறுகளில் 1200 அடி வரை தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காங்கேயம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பெரும்பாலான பகுதி வறட்சியான பகுதியாகும். இதன் காரணமாகவே இந்த பகுதியில் அரிசி ஆலைகளும், தேங்காய் எண்ணெய் ஆலைகளும் அதிகமாக உள்ளது. நெல் உலர்த்துவதற்கும், தேங்காய் பருப்பு உலர்த்துவதற்கும் ஏற்ற வெப்ப நிலை இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.

காங்கேயம் ஒன்றியத்தில் உள்ள பாலசமுத்திரம்புதூர், மரவாபாளையம் பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர், பழையகோட்டை போன்ற ஊராட்சி பகுதிகள் மட்டுமே ஓரளவுக்கு கீல்பவானி பாசனம் உள்ளது. இந்த பகுதியிலும் பெரும்பாலான விவசாயிகள் நீண்ட கால பலனை தரும் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான விவசாய தோட்டங்களில் அதிக அளவில் தென்னை மரங்கள் வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. அதன் பின் தண்ணீர் விடவில்லை.

நஷ்டம்

இதன் காரணமாக இந்த வாய்க்கால் ஓரங்களில் இருந்த விவசாய கிணறுகள் வறண்டு போனது. கடுமையான வறட்சியின் காரணமாக குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில் குடிநீருக்காகவும், இருக்கும் தென்னை மரங்களை காப்பாற்றவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் புதிதாக ஆழ்குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மரவபாளையம், கீரனூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 25–க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்க முயற்சி செய்தும் பெரும்பாலான ஆழ்குழாய்களில் தண்ணீர் இல்லாமல் வெறும் புகையாகவே வந்தது.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுபற்றி மரவபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. வாடிக்கொண்டிருக்கும் தென்னை மரங்களை காப்பாற்றவும், கால்நடைகளை காப்பாற்றவும் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். முன்பெல்லாம் சுமார் 500, 600 அடி போட்டாலே ஆழ்குழாய்கள் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும். தற்போது 1200 அடி வரை போட்டாலும் தண்ணீர் இல்லை. தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிட்டது.

விவசாயிகள் வேதனை

இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இந்த வறட்சியில் ஆழ்குழாய்க்கு மட்டும் ஒவ்வொரு விவசாயியும் சுமார் ஒரு லட்சம் வரை இழப்பை சந்தித்து வருகிறார்கள். அதுவும் ரிக் வண்டிகளும் உடனே கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு ரிக் வண்டிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அதிக பொருட்செலவில் போடப்படும் ஒரு சில ஆழ்குழாய் கிணறுகளிலும் குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரை குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்களை எங்கே காப்பாற்றுவது“ இவ்வாறு அவர் கூறினார்.


Next Story