அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் தொட்டிகள் அமைத்து மான்களுக்கு தண்ணீர் வசதி


அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் தொட்டிகள் அமைத்து மான்களுக்கு தண்ணீர் வசதி
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் தொட்டிகள் அமைத்து மான்களுக்கு தண்ணீர் வசதியை வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

திருப்பூர்

திருப்பூரை அடுத்த அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட புதுப்பாளையம், கோதபாளையம், நல்லகட்டிப்பாளையம், பழங்கரை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் 400–க்கும் மேற்பட்ட மான்கள் இருப்பதாக வனத்துறையினர் கணக்கெடுப்பு செய்துள்ளனர். இந்த மான்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் குடித்து வந்தன. இந்த நிலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மான்களுக்கு தண்ணீர் போதுமான அளவு கிடைக்கவில்லை.

இதனால் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழையும் மான்களை நாய்கள் துரத்திச்சென்று கடித்து கொன்று விடுகிறது. ரோட்டை கடக்கும்போது சில மான்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் அவினாசி அருகே தெக்கலூரில் நாய்கள் துரத்தியபோது நெடுஞ்சாலையை கடந்த 5 மான்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களில் அடிபட்டு பலியானது. கடந்த 2 மாதங்களில் 10–க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகி உள்ளன.

தண்ணீர் தொட்டிகள்

மான்களின் இறப்பை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட வன அதிகாரி பெரியசாமி திருப்பூர் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் வன சரக அதிகாரி மகேஷ் தலைமையில் வனவர் சுப்பையா மற்றும் வனத்துறையினர் அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் மான்கள் அதிகம் உள்ள காட்டுப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழங்கரை, சங்கமாங்குளம், நல்லகட்டிபாளையம், வண்ணத்தங்கரை ஓடை, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 6 இடங்களில் சிறிய அளவிலான சிமெண்டு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் சிறிய லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும் சில இடங்களில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

தண்டோரா போட்டு அறிவிப்பு

இதுகுறித்து திருப்பூர் வன சரக அதிகாரி மகேஷ் கூறும்போது, ஏற்கனவே கோதபாளையம், புதுப்பாளையம் பகுதியில் பெரிய தொட்டிகள் கட்டப்பட்டு அருகில் உள்ள தோட்ட கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து நிரம்பி வைக்கிறோம். வறட்சி காரணமாக தண்ணீர் தேடியும், உணவு தேடியும் மான்கள் கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இவ்வாறு வரும் மான்களை நாய்கள் துரத்துவதால் வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றன. நாய்களிடம் சிக்கியும் மான்கள் இறந்து வருகின்றன. மழை பெய்தால் குளத்துப்பகுதியில் தீவனப்பயிர் பயிரிட்டு மான்களுக்கு தேவையான தீவனம் கிடைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அவினாசி தாலுகா பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாய்களை கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மூலமாக தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story