சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் தார்ப்பாயை கிழித்து ரூ.4¾ லட்சம் டயர்கள் திருட்டு


சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் தார்ப்பாயை கிழித்து ரூ.4¾ லட்சம் டயர்கள் திருட்டு
x
தினத்தந்தி 16 April 2017 1:44 AM IST (Updated: 16 April 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி அருகே நெட்டூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் தார்ப்பாயை கிழித்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மங்களூரு,

உடுப்பி அருகே நெட்டூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் தார்ப்பாயை கிழித்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ரூ.4¾ லட்சம் மதிப்பிலான டயர்கள்

கோவா மாநிலத்தில் இருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு மங்களூரு நோக்கி கடந்த 2 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரியை மங்களூருவைச் சேர்ந்த பசவராஜ் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலையில் லாரி உடுப்பி அருகே நெட்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது மிகவும் சோர்வடைந்த டிரைவர் பசவராஜ், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, லாரியின் அருகே படுத்து தூங்கிவிட்டார். மீண்டும் காலையில் எழுந்து பார்த்தார். அப்போது லாரியின் பின் ஏற்றி வைக்கப்பட்டிருந்த டயர்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், டயர்களை திருடிச் சென்றுவிட்டது பசவராஜுக்கு தெரியவந்தது. திருட்டுப்போன டயர்களின் மதிப்பு ரூ.4¾ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ், இதுபற்றி உடுப்பி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது யாரோ சில மர்ம நபர்கள் லாரியில் வந்து, லாவகமாக டயர்கள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரியின் மேல் போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை கிழித்துள்ளனர். பின்னர் அந்த லாரியில் இருந்து டயர்களை திருடி தங்களுடைய லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டயர்களை திருடிச்சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story