குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ஆண்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11–வது வார்டு பூக்காரத் தெரு பகுதியில் கடந்த சில வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவலறிந்த ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மாரியப்பன் அங்கு விரைந்து வந்தார். பின்னர் பொதுமக்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.