சென்னையில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி மாணவ–மாணவிகள் கூட்டம் அலைமோதியது


சென்னையில் ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி மாணவ–மாணவிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 16 April 2017 5:00 AM IST (Updated: 16 April 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேற்று நடந்த ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சியில் மாணவ–மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

கல்வியில் மாணவ–மாணவிகளை ஊக்கப்படுத்துவதற்காக ‘தினத்தந்தி’ நாளிதழில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாணவர்
ஸ்பெ‌ஷல் என்ற பகுதியை இணைத்து வெளியிட்டு வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகளில் மாணவ–மாணவிகள் அதிகளவில் மதிப்பெண் பெறுவதற்கு வசதியாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினா–விடை புத்தகத்தையும் தேர்வுக்கு முந்தைய காலகட்டங்களில் ‘தினத்தந்தி’ நாளிதழுடன் இலவசமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

‘வெற்றி நிச்சயம்’

பிளஸ்–2 மாணவ–மாணவிகள் மேற்படிப்பை தொடருவதற்கு என்ன படிக்கலாம்? எந்த படிப்பை தேர்ந்து எடுக்கலாம்? என்ற ஆலோசனைகளை வழங்குவதற்காக ‘வெற்றி நிச்சயம்’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்திவருகிறது.

இதுபோன்று மாணவர் சமுதாயம் மீது அக்கறை கொண்டு பல்வேறு பணிகளை செய்து வரும் ‘தினத்தந்தி’ தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மற்றொரு முயற்சியாக ‘தினத்தந்தி கல்வி எக்ஸ்போ’ என்ற கண்காட்சியையும் நடத்துகிறது.

‘தினத்தந்தி கல்வி எக்ஸ்போ’

அதன்படி, இந்த ஆண்டு ‘தினத்தந்தி’ மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் இணைந்து ‘கல்வி எக்ஸ்போ 2017’ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர், இந்துஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) ஜி.இளவழகன், அமெத் பல்கலைக்கழக துணை தலைவர் ராஜேஷ் ராமச்சந்திரன், சென்னைஸ் அமிர்தா இன்டர்நே‌ஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் முதன்மை செயல் அதிகாரி பூமிநாதன், ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆஷாலதா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

80–க்கும் மேற்பட்ட அரங்குகள்

இந்த கண்காட்சியில் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் 80–க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ்–2 முடித்த ஏராளமான மாணவ–மாணவிகள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றனர்.

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகள், பாலிடெக்னிக் படிப்புகள் உள்பட பல்வேறு படிப்புகளை எங்கு படித்தால் நன்றாக இருக்கும்? குறிப்பிட்ட படிப்புகளை எடுப்பதால் என்ன பலன்? அவ்வாறு தேர்ந்தெடுக்கும் படிப்புகளை இந்தியாவில் படிக்கலாமா? அல்லது வெளிநாடுகளில் சென்று படிக்கலாமா? என்பன போன்ற மாணவ–மாணவிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஒவ்வொரு அரங்கிலும் இருக்கும் கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் சரியான பதில்களை வழங்கியும், அவர்களுக்கு மேற்படிப்பை எடுத்து படிக்க தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

மேலும், ஒவ்வொரு படிப்பிலும் சேருவதற்கு பிளஸ்–2–வில் என்ன பாடத்தை படித்திருக்க வேண்டும் என்றும், தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும் மாணவ–மாணவிகளுக்கு விளக்கி கூறினார்கள்.

விருப்பம்

பிரபல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அரங்குகள் ஒரே இடத்தில் ஒருங்கே அமைந்திருப்பதால் மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை எளிதில் நிவர்த்தி செய்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

பெரும்பாலான மாணவ–மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்திருந்தனர். அவ்வாறு வருவதன் மூலம் மாணவர் பெற்றோரிடையே விருப்ப பாடங்களை தேர்வு செய்வதில் ஏற்படும் குழப்பங்களை நிவர்த்தி செய்வது எளிதாக இருக்கும் என்று கல்வி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுப்பதிலேயே விருப்பம் தெரிவித்தனர்.

அரங்குகளில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கல்வியின் சிறப்பம்சங்கள் பற்றியும், மாணவர் சேர்க்கை முறைப்பற்றியும் தகவல்களை அளித்து, பெற்றோர் மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் கூறியதாவது:–

பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கட்டிடக்கலை, பிசியோதெரபி, நர்சிங், மேனேஜ்மென்ட் படிப்பு ஆகிய படிப்புகள் எங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளன. மாணவ–மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். குறிப்பாக வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் வகையில் இந்த ஆண்டு புதுமையான பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டு உள்ளன.

‘தினத்தந்தி’யுடன் இணைந்து இந்த கல்வி கண்காட்சியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னை மாநகர எல்லைக்குள் எங்கள் கல்லூரி அமைந்துள்ளதால், மாணவ–மாணவிகள் எளிதில் வந்து சென்று படிப்பதற்கு ஏதுவாக அமைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரவாதம்

இதையடுத்து, இந்துஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) ஜி.இளவழகன் கூறுகையில், ‘இந்த கண்காட்சி மூலம் மாணவர்கள் தங்களுடைய மேற்படிப்பை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமம் குறைக்கப்படுகிறது. இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் அதிகளவில் உள்ளன. மாணவ–மாணவிகளின் கல்வித்தகுதியை எங்கள் பல்கலைக்கழகம் மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் விளையாட்டு கல்விக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். பல்கலைக்கழகத்தில் மாணவ–மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கிறது’ என்றார்.

சென்னைஸ் அமிர்தா இன்டர்நே‌ஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் முதன்மை செயல் அதிகாரி பூமிநாதன் கூறும்போது, ‘தினத்தந்தி’ பெரிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த கல்வி கண்காட்சியை நடத்துவதால் மாணவ–மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சென்னைஸ் அமிர்தாவில் மாணவ–மாணவிகள் படிக்கும்போதே, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறோம். 100 சதவீதம் வேலைக்கு உத்தரவாதம் நாங்கள் தருகிறோம்’ என்றார்.

நிறைவேற்றி தருகிறது

அமெத் பல்கலைக்கழக துணைத்தலைவர் ராஜேஷ் ராமச்சந்திரன் கூறும்போது, ‘கப்பல் சார்ந்த படிப்புகள் எங்கள் பல்கலைக்கழகத்தில் அதிகளவில் உள்ளன. ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளை படிப்பு முடிக்கும் முன்பே வேலை கிடைத்து நல்ல சம்பளத்தில் பணியில் சேர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த கனவை எங்கள் பல்கலைக்கழகம் நிறைவேற்றி தருகிறது’ என்றார்.

ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆஷாலதா கூறுகையில், ‘வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் அனைத்தும் எங்கள் கல்லூரியில் இருக்கிறது. மாணவர்கள் படித்து கொண்டு இருக்கும் போதே வேலைவாய்ப்பை நாங்கள் அமைத்து தருகிறோம். எங்களுடைய கல்லூரியில் மாணவ–மாணவிகள் மனநிறைவுடன் படிப்பதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம்’ என்றார்.

இன்றுடன் நிறைவு

விமானத்துறை (ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங்), கப்பல் துறைகளில் (மரைன் என்ஜினீயரிங்) உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், அவற்றில் சேர்ந்து படிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் ஏராளமான மாணவ–மாணவிகள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். மாணவ–மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் வந்து செல்வதற்கு வசதியாக கிண்டி, கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், போரூர், பல்லாவரம், வேளச்சேரி விஜயாநகர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயனுள்ளதாக  இருந்தது

‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சியில் பங்கு பெற்ற கிண்டியை சேர்ந்த அருள் விவேகா என்ற மாணவி கூறியதாவது:–

கல்வி கண்காட்சி தொடர்பாக ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து இங்கு வந்தேன். எனக்கு என்ஜினீயரிங் அல்லது பி.பி.ஏ. படிப்பு படிக்க வேண்டும் என்பது ஆசை. என்னுடைய தந்தையிடம் இது குறித்து கூறினேன்.

அவரும் நானும் சேர்ந்து இந்த கண்காட்சிக்கு வந்து அந்த 2 பாடப்பிரிவுகள் தொடர்பாக அரங்கில் இருந்த ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். இப்போது நான் என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்து இருக்கிறேன். வீட்டுக்கு சென்று முழு மனதுடன் முடிவெடுத்து நான் எந்த கல்லூரியில் சேரலாம் என்பதை தீர்மானிக்க இருக்கிறேன். இந்த கண்காட்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மனநிறைவு

‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சியில் கலந்து கொண்ட சென்னை பாடியை சேர்ந்த மம்தா குமாரி என்ற மாணவி கூறியதாவது:–

நான் பிளஸ்–2 தேர்வு எழுதி இருக்கிறேன். அடுத்து மேற்படிப்பை தொடருவதற்கு திட்டமிட எனது பெற்றோருடன் இந்த கண்காட்சிக்கு வந்தேன். நான் ஆசிரியராக வேண்டும் என்பது தான் என்னுடைய சிறுவயது ஆசை. என்னுடைய தந்தை தொழில் அதிபர் என்பதால் அதுதொடர்பான படிப்பை தேர்ந்தெடுக்க இப்போது முடிவு செய்துள்ளேன்.

அதன்படி பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகே‌ஷன் படிப்பு தொடர்பாக இந்த கண்காட்சியில் விசாரித்தேன். எனக்கு அரங்கில் இருந்த கல்வி ஆலோசகர்கள் நல்ல விதமான தகவல்களை கூறி இருக்கிறார்கள். நான் பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகே‌ஷன் படிப்பை மனநிறைவுடன் தொடங்க இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெளிவு கிடைத்தது

‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சியில் தன்னுடைய மகளுடன் கலந்து கொண்ட சுஜாதா என்ற பெண் கூறும்போது, ‘என்னுடைய மகளின் எண்ணப்படி தான் அவளை படிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம். அவளும் பலவிதமான படிப்புகளை எங்களிடம் கூறினாள். அது தொடர்பாக அவளுக்கு குழப்பங்கள் இருந்தது. இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு அந்த குழப்பத்துக்கு தெளிவு கிடைத்துவிட்டது’ என்றார்.

Next Story