கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 தொழிலாளர்கள் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 தொழிலாளர்கள் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 16 April 2017 2:18 AM IST (Updated: 16 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 தொழிலாளர்களை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

திருச்சி,

திருச்சி அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள வாள் பட்டறை ஒன்றில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 32) மற்றும் காந்தி மார்க்கெட்டை சேர்ந்த மாரியப்பன்(26) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் வேலை முடித்து விட்டு 2 பேரும் ராசிபுரம் மேலக்காட்டில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10.30 மணியளவில் ஆவூர் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது சாலை என்று நினைத்து சிவக்குமாரும், மாரியப்பனும் சாலையின் ஓரமாக இருந்த சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தனர்.

கிணற்றில் 8 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. இதனால் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் அவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். மேலும் 2 பேரும் கிணற்றுக்குள்ளே இருந்து சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்ட அவ்வழியாக சென்ற ஒருவர் கிணற்றில் எட்டிப்பார்த்தார். அப்போது உள்ளே 2 வாலிபர்கள் தண்ணீரில் தத்தளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சுமார் 1¼ மணி நேரம் போராடி...

இதையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அந்த பகுதியில் கூடினர். மேலும் அவர்கள் இது குறித்து உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் தனபால் தலைமையில் 7 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் சுமார் 1¼ மணி நேரம் போராடி சிவக்குமார், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் கயிறு கட்டி மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

கிணற்றில் தவறி விழுந்ததால் சிவக்குமாருக்கும், மாரியப்பனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிணற்றுக்குள் இறங்கி 2 பேரை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்த தீயணைப்பு வீரர்களை, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பாராட்டினர். 

Next Story