வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து அரசு ஊழியர்கள் போராட்டம்


வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து அரசு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 April 2017 3:45 AM IST (Updated: 16 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

திண்டுக்கல், தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருச்சியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள அரசு பஸ், வேன் மற்றும் கார் போன்ற வாகனங்களில் வந்தனர். நேற்று மதியம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடிக்கு அந்த வாகனங்கள் வந்தன. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்தி விட்டு செல்லும்படி, வாகன ஓட்டிகளிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அரசு ஊழியர் சங்கத்தினர், கட்டணம் செலுத்த மறுத்ததாக தெரிகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்களை அங்கிருந்து அனுப்ப மறுத்தனர். இதையடுத்து வாகனங்களில் இருந்த அரசு ஊழியர்கள் கீழே இறங்கி, சுங்கச்சாவடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் அணிவகுத்து நின்றன

சிறிது நேரம் இந்த போராட்டம் தொடர்ந்ததால் சுங்கச்சாவடியின் இரண்டு புறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுங்கச்சாவடி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டணம் இன்றி அவர்களுடைய வாகனங்களை அனுப்பினர். இதைத்தொடர்ந்து வழக்கம்போல் அப்பகுதியில் வாகனங்கள் இயங்கின. இந்த சம்பவத்தால் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story