வேலை நிறுத்த போராட்டத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்


வேலை நிறுத்த போராட்டத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 25-ந் தேதி தொடங்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று திருச்சியில் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.

திருச்சி,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சனை வழங்கிட வேண்டும். 1.1.2016 முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து, காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துத்துறை ஊழியர் சங்க போராட்டக்குழு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

ஆயத்த மாநாடு

இதனையொட்டி மாநில அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பரசு, மாநில துணைத்தலைவர் குமாரவேல், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ்நாடு துணை பொதுச்செயலாளர் கருமலையான் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

2 லட்சம் பேர் பங்கேற்பார்கள்

மாநாட்டில் பங்கேற்ற மாநில தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த ஒரு மாதத்துக்கு முன்பே நோட்டீசு கொடுத்து உள்ளோம். வருகிற 25-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். இதற்கான வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சியில் தற்போது நடந்துள்ளது.

அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் தமிழக அரசு வஞ்சிக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் பிறப்பித்த உத்தரவுகளை இந்த அரசு உதாசீனப்படுத்துகிறது. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வருவாய்த்துறை, வணிகவரித்துறை உள்பட 61 துறைகளில் இருந்து 2 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். இதனால் அனைத்து துறைகளின் பணிகளும் கடுமையாக பாதிக்கும். ஆகவே உடனடியாக தமிழக அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story