பெரம்பலூர் அருகே சாலை பணிக்கு பயன்படுத்தப்படும் லாரி தீப்பிடித்து எரிந்தது


பெரம்பலூர் அருகே சாலை பணிக்கு பயன்படுத்தப்படும் லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சாலை விரிவாக்க பணிக்கு பயன்படுத்தப்படும் லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.

குன்னம்,

பெரம்பலூர் முதல் தஞ்சாவூர் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த திட்ட பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் லாரிகள், பொக்ளின் எந்திரம், சாலையை சமன்படுத்தும் எந்திரம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் பெரம்பலூர்- தஞ்சாவூர் சாலை விரிவாக்க திட்ட பணிகளுக்காக பெரம்பலூர் அருகே கே.எறையூர் பிரிவு சாலையில் தற்காலிகமாக முகாம் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திட்ட அலுவலகம் தனியாகவும், அதன் அருகே பட்டறையும் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளின் போது பழுதடைந்த லாரி உள்ளிட்ட வாகனங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு பழுது நீக்கப்படுவது வழக்கம்.

கொழுந்துவிட்டு எரிந்த லாரி

இந்த நிலையில் நேற்று அந்த பட்டறையில் உள்ள ஷெட்டில் சாலைப்பணியின் போது தார் கலவையினை ரோட்டில் தெளிக்க பயன்படுத்தப்படும் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சில பணியாளர்கள் அந்த லாரியை சுத்தம் செய்வது உள்ளிட்ட மராமத்து பணியை மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த லாரியின் பின்பகுதியில் இருந்த தார் டேங்கில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர். இந்நிலையில் குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் ஏற்பட்டதுடன், லாரி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. கரும்புகை வெளியேறியதை கண்டு அந்த கிராம மக்களும் அங்கு திரண்டனர்.

தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்

இதற்கிடையே லாரியில் இருந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த டயர்களுக்கும் தீ பரவியது. அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தார் டின்களிலும் தீப்பிடித்தது. இதற்கிடையே அங்கிருந்த சாலை திட்டப்பணி அதிகாரிகள் இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர்கள் பால்ராஜ், சதாசிவம் (போக்குவரத்து) மற்றும் முன்னணி தீயணைப்பாளர் செந்தில்குமார், தெய்வமணி, கல்யாணவாசன், தனபால், வினோத்குமார் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

லாரியை சுற்றிலும் எண்ணெய் படலம் போல் பரவி இருந்ததால், முதல் கட்டமாக நுரைதணிப்பானை எரிந்து கொண்டிருந்த லாரி மீது பீய்ச்சி அடித்தனர். அதன் பிறகு எரிந்து கொண்டிருந்த லாரி, அதன் அருகே கிடந்த டயர்கள், தார் டின்கள் உள்ளிட்டவற்றின் மீது தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தனர்.

விபத்துக்கான காரணம் என்ன?

ஒரு கட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த டயர்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் முற்றிலுமாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த திடீர் தீ விபத்தில் சாலைப்பணிக்கு தார் கலவை ஊற்ற பயன்படுத்தப்படும் லாரி மற்றும் தார் டின்கள், லாரி டயர்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மருவத்தூர் போலீசார் வந்து தீ விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து விசாரித்தனர். தார் டேங்கில் இருந்து அதன் கலவை வெளியேறியதால் வெப்பம் தாங்காமல் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததா? அல்லது ஷெட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story