மனுநீதி நாள் முகாம் நடப்பதற்கு முன்பே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் கலெக்டர் பேச்சு


மனுநீதி நாள் முகாம் நடப்பதற்கு முன்பே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2017 3:30 AM IST (Updated: 16 April 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

மனுநீதி நாள் முகாம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என்று கலெக்டர் பொன்னையா கூறினார்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேட்டில்  மனுநீதி நாள் மகாம் நடந்தது. இதற்கு திருக்கழுக்குன்றம் தாசில்தார் மனோகரன் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்.எல்.ஏ. கோதண்டபாணி முன்னிலை வகித்தார்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மனுநீதிநாள் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒவ்வொரு மாவட்டத்திலும் கடைக்கோடி கிராமத்தினரும் நம்மிடம் முறையிடவும், சிறிய கிராமத்திலும் இந்த முகாம் நடத்துகிறோம். ஓரிடத்தில் முகாம் நடத்தப்படும்போது சில நாட்களுக்கு முன்பே வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகள், பிரச்சினைகள் குறித்து அறிந்து தீர்வு காணக்கூடியவற்றை முகாமின்போது நிறைவேற்ற வேண்டும். இதுதான் மனுநீதி நாள்.

முன்னதாகவே
கோரிக்கை மனுக்கள்

 இந்த நடைமுறைதான் சில மாவட்டங்களில் நடக்கிறது. இந்த முகாமில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கவும், ரே‌ஷன்கடை கேட்டும் மக்கள் முறையிட்டுள்ளனர். இது குறித்து முன்னரே தெரிந்திருந்தால் அதற்கு ஏற்பாடு செய்து இன்றே நிறைவேற்றி இருக்கலாம். இனி எங்கு மனுநீதி நாள் முகாம் நடந்தாலும் முன்னதாகவே கோரிக்கை மனுக்கள் பெறப்படும். அதற்கு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பிரசன்னாவசந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வநாயகி கோதண்டராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story