திருபுவனை அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; கிராமத்தினர் உண்ணாவிரதம்
திருபுவனை அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து புதுவை மாநிலம் மதகடிப்பட்டில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதில் ஒரு மதுக்கடையை திருபுவனை அருகே ஆண்டியார்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அமைக்க ஏற்பாடு நடந்தது.
இதனை அறிந்த ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த மக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதகடிப்பட்டு நான்கு சந்திப்பில் கடந்த 10–ந்தேதி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை திருபுவனை போலீசார் சமாதானம் செய்தனர்.
உண்ணாவிரதம்இருந்தபோதிலும் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க மாட்டோம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. இதனால் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாமியான பந்தல் அமைத்து ஆண்டியார்பாளையம் மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 150–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.