புதுவை துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது


புதுவை துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப்போனது. இதனால் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இந்தநிலையில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி கடந்த சில வாரங்களாக வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல்காற்று வீசுகிறது.

இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் புதுவை நகர வீதிகள், கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றன. மாலை 5 மணிக்கு மேல் தான் வெயிலின் தாக்கம் குறையும் நிலை இருந்து வருகிறது. வெயிலின் கொடுமையால் அவதிப்பட்டு வரும் மக்கள் கோடைமழை பெய்யாதா? என்ற ஏக்கத்தில் இருந்து வருகின்றனர்.

புயல் எச்சரிக்கை கூண்டு

இந்தநிலையில் தற்போது வங்கக்கடலில் அந்தமான் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் புதுவை கடல் வழக்கத்துக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்டது. அலைகள் சீறிப்பாய்ந்தன. இதையொட்டி துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story