பாந்திரா எஸ்.வி ரோடு அருகே மோட்டார் சைக்கிளுடன் மேம்பாலத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி ஆபத்தான நிலையில் இளம்பெண்ணிற்கு சிகிச்சை
பாந்திரா எஸ்.வி ரோடு அருகே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
மும்பை,
பாந்திரா எஸ்.வி ரோடு அருகே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். மேலும் அவருடன் சென்ற இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
20 அடி உயரம்மும்பை குரார் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய் காம்ளே (வயது20). இவரது தோழி பாந்திராவை சேர்ந்த தர்ஷதா (18). நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் அக்ஷய் காம்ளே, இளம்பெண் தர்ஷதாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். இவர்கள் பாந்திரா மேற்கு எஸ்.வி ரோடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
வாலிபர் பலிஅப்போது அந்த வழியாக வந்த போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டு பாபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அக்ஷய் காம்ளே பலியானார். மேலும் தர்ஷதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.