யாருக்கு நஷ்டம்?


யாருக்கு நஷ்டம்?
x
தினத்தந்தி 16 April 2017 12:14 PM IST (Updated: 16 April 2017 12:14 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர்... சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பாக அடிபட்ட பெயர். நல்ல வி‌ஷயத்துக்காக அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆர்.கே.நகர்...

சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பாக அடிபட்ட பெயர். நல்ல வி‌ஷயத்துக்காக அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர் களுக்கு லஞ்சமாக பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததற்காக ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது நமது ஜனநாயகத்துக்கு பெரும் இழுக்கையும், தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒழுக்கத்துக்கும், நேர்மைக்கும் பெயர்போன முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெயரால் அமைந்த தொகுதி,  இப்படி ஒரு அவப்பெயரால் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருப்பது வருத்தப்படக்கூடிய ஒன்றுதான்.

‘‘ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம்; உள்ளே பார்த்தால் ஆயிரம் ஈறும், பேனுமாம்’’ என்பார்கள்.

‘உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்று சர்வதேச அரங்கில் நாம் மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்ன பாடுபடுகிறது என்பது வெளியே இருப்பவர்களுக்கு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை.

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். ஆனால் நிழலிலேயே இருந்து விட்டால் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியாமல் போய்விடும்.

அந்த நிலைதான் தற்போது நம் நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகத்தின் அருமையை மக்கள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளாமல் தவறாக பயன்படுத்துகிறார்களோ என்ற ஆதங்கமும், கவலையும் தேச நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் மனதிலும் எழுகிறது.

ஜனநாயக ஆட்சி முறையின் முக்கிய அம்சங்களில் ஒன்று தேர்தல். தங்களை ஆள்பவர்களை தாங்களே தேர்ந்து எடுக்கும் உரிமையை ஜனநாயகம் மக்களுக்கு வழங்கி இருக்கிறது.

125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா போன்ற ஒரு மாபெரும் தேசத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாதாரண வி‌ஷயம் அல்ல. என்றாலும் சுயாட்சி அதிகாரம் பெற்ற அரசியல் சாசன அமைப்பான இந்திய தேர்தல் கமி‌ஷன் அதை திறம்பட செய்து வருகிறது.

தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், போட்டியிடும் வேட்பாளர்களிடம் பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதற்காகவும் தேர்தல் கமி‌ஷன் பல்வேறு சட்டதிட்டங்களை வகுத்து இருக்கிறது.

ஆனால் சட்டங்களுக்கு அரசியல்வாதிகள் எப்போதும் சவாலாகவே விளங்குகிறார்கள்.

எத்தனை சட்ட திட்டங்கள் இருந்தால் என்ன? அந்த சட்டங்களில் எங்கெங்கே ஓட்டைகள் இருக்கின்றன என்பதை கண்டறிந்து, தவறுகள்  செய்துவிட்டு தப்பிப்பதில் நம் அரசியல்வாதிகளை மிஞ்ச யாரும் கிடையாது.

அரசியல்வாதிகளின் சாகசங்களுக்கு சமீபத்திய உதாரணம்தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்.

இங்கு நடந்த அத்துமீறல்களையும், முறைகேடுகளையும் பார்த்து, அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் தேர்தல் கமி‌ஷன் கையை பிசைந்து கொண்டு நின்றதை பார்க்க முடிந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது? என எதிர்பார்த்து ஒட்டுமொத்த தேசமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தது.

‘‘வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறாயா? நான் கொடுக்கிறேன் உன்னால் முடிந்தால் தடுத்துப் பார்’’ என்று தேர்தல் கமி‌ஷனுக்கு சவால் விடும் வகையில், தெருக்கள் வாரியாக, வாக்குச்சாவடி வாரியாக குழுக்கள் அமைத்து, தேர்தல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இரவு–பகலாக ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களின் கைகளில் திணித்தார்கள்.

தேர்தல் அதிகாரிகள் பகீரத பிரயத்தனப்பட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்த ஒரு சிலரைத்தான் பிடிக்க முடிந்ததே தவிர அவர்களால் ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்த முடியவில்லை.

தன்னிடம் உள்ள அனைத்து படை பரிவாரங்களை களத்தில் இறக்கியும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பதால், வேறு வழியின்றி தன்னிடம் உள்ள கடைசி ஆயுதமான ‘தேர்தல் ரத்து’ என்ற பாணத்தை ஆர்.கே.நகர் மக்கள் மீது தேர்தல் கமி‌ஷன் ஏவியது. அந்த வகையில் பார்த்தால் அரசியல்வாதிகளிடம் தேர்தல் கமி‌ஷன் தோற்றுவிட்டது என்றே கூறலாம்.

‘தேர்தல் ரத்து’ என்ற ஒரே அறிவிப்பின் மூலம் தேர்தல் கமி‌ஷன்  பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அனேகமாக இதுவே முதல் தடவையாக இருக்கும்.

பணம்  மக்களை  விலைக்கு வாங்கிவிடுமோ என்று பலரும் அஞ்சிய நிலையில், ஜனநாயகத்தை காப்பாற்றும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருப்பவர்களுக்கு பெரும் ஆறுதலை அளித்து இருக்கிறது.

என்றாலும் இன்னொரு ஆதங்கமும் இல்லாமல் இல்லை. இந்த இடைத்தேர்தல் மூலம்தான் எவ்வளவு பணம், எவ்வளவு மனித உழைப்பு, எவ்வளவு நேரம் வீணாகி இருக்கிறது?

ஆர்.கே.நகர் தொகுதியில் பெருமளவில் முறைகேடுகளும், மோதல்களும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமி‌ஷன் கருதியதால் கூடுதல் துணை ராணுவ படையினரை வரவழைத்தது. மேலும் கூடுதல் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் என அதிக அளவில் அதிகாரிகளை பணியில் அமர்த்தியது. இதற்காக அதிக பணம் செலவானது.

இந்த தொகுதி இடைத்தேர்தலுக்காக தமிழக அரசு கடந்த 9–ந் தேதி இரவு வரை ரூ.2 கோடி செலவிட்டு இருக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? என்பது உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பது, வெளியூர்களில் இருந்து மத்திய படையினரை பாதுகாப்புக்கு வரவழைப்பது போன்ற பணிகளுக்காக இந்த தொகை செலவாகி இருக்கிறது. அரசாங்கத்தின் பணம் என்றாலும் இது மக்களின் வரிப்பணம்தான்.

இது ஒருபுறம் இருக்க கட்சிகள் தரப்பிலான செலவும் உள்ளது. தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்கள் என்றால், ஒரு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு கட்சிகள் ரூ.16 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று வரம்பு உள்ளது.

ஆனால் பெரிய கட்சிகளின் செலவு இந்த வரம்புக்குள் நிற்பதில்லை. கொடி, தோரணம், பதாகைகள், வெளியூர்களில் இருந்து பிரசாரத்துக்காக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்டி வருவது, அவர்களை தங்க வைப்பது, அவர்களுக்கான உணவு, போக்குவரத்து செலவு என பணத்தை வாரி இறைக்க வேண்டும். இதெல்லாம் கணக்கில் வராது.

இது தவிர சமீப காலமாக, வேட்பாளரின் வசதி, கட்சிகளின் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணமும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் சில கட்சிகளும், வேட்பாளர்களும் ரூ.1 கோடி முதல் ரூ.90 கோடி வரை பணத்தை அள்ளி வீசி இருப்பதாக தெரியவந்து உள்ளது.

ஆனால் சிறிய கட்சிகளாலும், சுயேச்சை வேட்பாளர்களாலும் இப்படி செலவழிக்க முடியாது. அதனால்தான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை வரவேற்றுள்ள அவர்கள், இதுவரை செலவிட்ட பணமெல்லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள்.

தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, செலவு தொகையை தேர்தல் கமி‌ஷனிடம் திருப்பி கேட்கிறது. ‘‘மக்களிடம் நன்கொடை வசூலித்துத்தான் நாங்கள் தேர்தலுக்கு செலவு செய்தோம். ஒவ்வொரு நாளும் செலவு கணக்கையும் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்து இருக்கிறோம். எனவே நாங்கள் செய்த செலவு தொகையை தேர்தல் கமி‌ஷன் எங்களுக்கு திருப்பி தரவேண்டும்’’ என்று அந்த கட்சி தேர்தல் கமி‌ஷனை கேட்டுக்கொண்டு உள்ளது.

ஆனால் இது சாத்தியமா? என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது அரசுக்கு ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்படி ஒவ்வொரு முறையும் தேர்தல் ரத்து செய்யப்படும் போதும் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. ஆனால் இதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

மறுபடியும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்போது, பணம் விளையாடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது

‘‘யாரோ ஒரு சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்றால், அவர்களை பிடித்து கடுமையாக தண்டிப்பதோடு, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கும் பயம் வரும். அவர்களும் தப்பு செய்ய தயங்குவார்கள். அதைவிடுத்து ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்வது எந்த வகையில் நியாயம்?’’ என்ற கேள்வி சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் அப்பாவிகளின் மனதில் எழுகிறது.

எனவே வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பதோடு, அவர்களை கைது செய்து சிறையில் தள்ளி சொத்துகளை பறிமுதல் செய்யவேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பது ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் விருப்பமாக உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படி ஒரு சட்டம் கொண்டு வரும் இடத்தில் தேர்தல் களத்துக்கு வரும் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள்.

யாராவது, தாங்களே தங்கள் கண்ணை குத்திக்கொள்வார்களா என்ன?

என்றாலும், ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருப்போம்.

தேர்தல் கமி‌ஷன் நஷ்டஈடு வாங்கி தருமா? –கங்கை அமரன்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து, பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட கங்கை அமரனின் கருத்து:–

‘‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் வெற்றிப்பெறக்கூடிய வாய்ப்பு உருவானது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் யாரும் செய்திராத அளவுக்கு 90 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்து தேர்தலில் ஜெயிக்க ஒரு கூட்டம் முயற்சி செய்தது. இதே காரியங்களில் மற்ற கழக வேட்பாளர்களும் ஈடுபட்டனர் என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும்.  

அதனை தேர்தல் கமி‌ஷன் கண்டுபிடித்து தேர்தலை ரத்து செய்ததை நான் வரவேற்கிறேன். தேர்தல் நிறுத்தப்பட்டதன் மூலம்தான் நாட்டு மக்களுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்ட உண்மை தெரியவந்து இருக்கிறது. பணபட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் கமி‌ஷன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனாலும் தேர்தல் ரத்து காரணமாக எனக்கு பொருட்செலவு, உழைப்பு விரயங்கள் ஏற்பட்டு இருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஒரு மாதம் இரவு பகலாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன். தெருத்தெருவாக நடந்தும், வாகனத்தில் சென்றும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்தேன். எனக்காக கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்தனர். இதை எப்படி ஈடுகட்டுவது.?

ஒரு கும்பல் செய்த தவறுக்காக மற்றவர்கள் பாதிக்கப்பட வேண்டுமா? ஆரம்பத்திலேயே இந்த பணபட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளை தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்து தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. பணபட்டுவாடா முறைகேடுகள் செய்து தேர்தல் ரத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து தேர்தல் கமி‌ஷன் நஷ்ட ஈடு வாங்கி தருமா?

எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் விலை நிர்ணயித்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. ரூ.90 கோடி, ரூ.100 கோடி என்று தொகுதிகளை ஏலம் விடும் சூழ்நிலையும் ஏற்படலாம். அப்படி நடந்தால் மக்களாட்சி தத்துவம் என்ன ஆவது? இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான விதி முறைகளை வகுக்க வேண்டும்’’.

பூனைக்கு யார்  மணி கட்டுவது?

இந்தியாவிலேயே ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர் களுக்கு பணம், பரிசுப் பொருட்களை லஞ்சமாக கொடுக்கும் அநாகரிகமான கலாசாரம் தமிழ்நாட்டில்தான் முதலில் உருவானது.

சில ஆண்டுகளுக்கு முன் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அறிமுகமான இந்த அவமானம், அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்கிறது. இப்படி பணம் கொடுப்பதற்கு ‘திருமங்கலம் பார்முலா’ என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்றபோதிலும், கொடுக்கும் போது வாங்கிக்கொள்வதில் என்ன தவறு? என்ற மனநிலையில் இருந்த மக்கள், இப்போது, ஏன் இன்னும் வந்து சேரவில்லை? என்று கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

உலகில் வாழைப்பழம் வேண்டாம் என்று மறுக்கும் குரங்கையும், பணத்தை வேண்டாம் என்று வெறுக்கும் மனிதனையும் பார்ப்பது மிக மிக அரிது.

ஒட்டுமொத்தமாக எல்லா வாக்காளர்களையும் இந்த பட்டியலில் சேர்த்துவிட முடியாது என்ற போதிலும், பெரும்பாலான மக்கள் இந்த எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.

‘‘நியாயமாக, கஷ்டப்பட்டு சம்பாதித்தால் இப்படி வாரி இறைக்க முடியுமா? கொள்ளையடித்த பணத்தில் அல்லது ஜெயித்து கொள்ளையடிக்கப்போகிற பணத்தின் ஒரு பகுதியைத்தானே கொடுக்கிறார்கள். அதை வாங்கிக்கொள்வதில் என்ன தவறு?’’ என்பது அவர்களுடைய கேள்வி.

ஆனால், பணம் வாங்கிவிட்டு ஓட்டுப் போட்டால், நாளை எம்.எல்.ஏ.வை கேள்வி கேட்க முடியுமா? என்பது நியாயவாதிகளின் கேள்வி.

அதற்கு, ‘‘நேர்மையாக ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தால் மட்டும் எம்.எல்.ஏ. எங்களை வந்து பார்க்கப் போகிறாரா? அல்லது அவரை நாங்கள் கேள்விதான் கேட்க முடியுமா என்ன?’’ என்பது பணத்தை எதிர்பார்ப்பவர்களின் பதிலாக உள்ளது.

பணம் கொடுப்பதை சில கட்சிக்காரர்களும் நிறுத்த தயாராக இல்லை. வாக்காளர்களும் வேண்டாம் என்று மறுக்க தயாராக இல்லை. தேர்தல் கமி‌ஷனாலும் அதை தடுத்து நிறுத்த முடிவில்லை.

அப்படியானால் இதற்கு முடிவுதான் என்ன?... பூனைக்கு யார் மணி கட்டுவது?

வாக்காளர்கள் நினைத்தால் இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம். யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக ஓட்டுப்போடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்தால், பணம் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிடுவார்கள். இரண்டு அல்லது மூன்று தேர்தல்களுக்குள் ‘ஓட்டுக்கு பணம்’ கலாசாரம் அடியோடு ஒழிந்துவிடும்.

‘‘மக்கள்  மாறவேண்டும்’’  –நரேஷ் குப்தா

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும், காந்தியவாதியுமான நரேஷ்குப்தா தெரிவித்த கருத்து வருமாறு:–

தேர்தல்களில் வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பண பட்டுவாடா செய்வது தொடர்பாக புகார்கள் வருவது சமுதாயத்திற்கு நல்லது அல்ல. மகாத்மா காந்தி சொன்னது போல், மக்கள், வாக்காளர்கள், அரசியல்வாதிகள் இடையே நேர்மைதன்மை இருக்க வேண்டும். தர்மத்தின் வழியில் செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

ஓர் ஆய்வில், 80 சதவீத மக்கள் பணத்தை விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்கள். சமூகம் மாறும்போது தான் தேர்தலில் சீர்திருத்தம் கிடைக்கும். தொகுதியின் வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி, வேட்பாளரின் தகுதி ஆகிவற்றை பரிசீலித்து, ஆராய்ந்து நல்ல பிரதிநிதியை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

பணத்துக்காக வாக்களிக்கும் மக்களின் மனநிலை மாற வேண்டும். தேர்தல் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்களின் மனநிலை மாறும்போது தான் தேர்தல் சீர்திருத்தத்தில் வெற்றி கிடைக்கும். மக்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு வாக்காளர்களும், அரசியல்வாதிகளும் கட்டுப்பட்டு நடந்தால் சமூகம் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டம்  என்ன  சொல்கிறது?

பாராளுமன்றம் அல்லது சட்டசபை தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தி உறுப்பினரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 151ஏ பிரிவு சொல்கிறது. அதன்படி வருகிற ஜூன் 4–ந் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும்.

ஆனால், இதற்கு விதிவிலக்கும் உள்ளது. அதாவது 6 மாத காலக்கெடுவுக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க முடியாத சூழ்நிலை இருந்தால் தேர்தல் கமி‌ஷன் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் நடத்துவதை காலவரையின்றி தள்ளிப்போடலாம்.

இதற்கு உதாரணமும் இருக்கிறது. காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதிக்கு 6 மாத காலக்கெடுவான இன்றைய தினத்துக்குள் (16–ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இதை வருகிற மே 25–ந் தேதிக்கு தேர்தல் கமி‌ஷன் தள்ளிவைத்து இருக்கிறது.

முன்பு உத்தரபிரதேச மாநிலம் கார்வால் பாராளுமன்ற தொகுதி காலியாக இருந்தபோது, 2 ஆண்டுகள் கழித்து 1982–ம் ஆண்டு மே மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. (தற்போது இந்த தொகுதி உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது).

Next Story