உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 16 April 2017 4:18 PM IST (Updated: 16 April 2017 4:17 PM IST)
t-max-icont-min-icon

அவன் பெருநகரம் ஒன்றில் படிக்கும் கல்லூரி மாணவன். விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறான்.

வன் பெருநகரம் ஒன்றில் படிக்கும் கல்லூரி மாணவன். விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறான். பெற்றோர் கிராமத்தை சேர்ந்த ஏழைகள். கஷ்டப்பட்டு அவனை அந்த கல்லூரியில் சேர்த்தார்கள்.

அவன் வருடத்திற்கு இரண்டு மூன்று முறை சொந்த ஊருக்கு வருவான். தொடக்கத்தில் அவன் நடை, உடையில் கிராமிய சாயலே நிறைந்திருந்தது. பின்பு படிப்படியாய் அவன் உடையில் நாகரிகத்தனம் தென்பட்டது. அவனிடம் நிறைய பணமும் புழங்கியது. சொந்த ஊருக்கு செல்லும்போது, கிராமத்து நண்பர்கள் எல்லாம் அவனை வியப்புடன் பார்க்கத் தொடங் கினார்கள்.

ஆனால் அவனது பெற்றோருக்குத்தான், ‘படிக்கிற பையன் கையில் இவ்வளவு பணம் எப்படி புழங்குகிறது?’ என்ற சந்தேகம் இருந்துகொண்டிருந்தது. அது பற்றி அவனிடம் விசாரித்தபோது, ‘லீவு நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பு செய்வேன். அதன் மூலம் வருமானம் வந்துகொண்டிருக்கிறது’ என்றான்.

அடுத்த ஒருசில மாதங்களில் போலீஸ் நிலையத்தில் இருந்து அவனது பெற்றோரை போனில் அழைத்தனர். பதறியபடி அவர்கள் மறுநாள் போலீஸ் நிலையம் வந்தடைந்தார்கள். போலீஸ் பிடியில் இருந்த மகனிடம் பல்வேறு விதமான விசாரணைகள் நடந்து கொண்டிருந்தது.

‘என் மகன் என்ன தப்பு செய்தான்?’ என்று பரிதாபமாக அவனது தாயார் போலீஸ் அதிகாரியிடம் கேட்டார்.

“11, 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளை குறிவைத்து, அவர்களை காதல் வலையில் விழவைப்பது உங்கள் மகனின் வேலை. காதலிப்பதாக நடித்து ஒவ்வொரு மாணவிக்கும் பணத்தை தண்ணீராக செலவு செய்திருக்கிறான். அவர்களுக்கு, அவன் மீது ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டதும் அவர்கள் உங்கள் மகனின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுவார்கள். பின்பு அவர்களை குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு அறிமுகம் செய்துவைப்பான். அவர்கள் திட்டமிட்டு சிறிய அளவிலான கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பார்கள். அதில் அந்த மாணவிகளை பங்கேற்க செய்து அவர்களுக்கு பீர் மற்றும் சிறிய அளவிலான போதை வஸ்துகளை அறிமுகம் செய்வார்கள். கைநிறைய பணமும் கொடுப்பார்கள்.

அந்த மாணவிகள் போதைப் பொருளுக்கும், பணத்திற்கும் அடிமையான பின்பு அவர்களது தோழிகளையும் அழைத்து வந்து அந்த குழுவுக்குள் இணைக்கும்படி மிரட்டியுள்ளார்கள். ஏழை மாணவிகளை குறிவைத்து இந்த குழு இயங்குகிறது. அந்த ‘நெட் ஒர்க்’ மூலம் ஏராளமான மாணவிகள் வளைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் போதைப் பொருள் விற்பனைக்காகவும், வேறு சில கலாசார சீரழிவிற்காகவும் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த குழுவை மொத்தமாக பிடித்துவிட்டோம். அந்த குழுவில் முக்கிய நபராக உங்கள் மகன் இருந்திருக் கிறான். அந்த குழுவிடம் இருந்து நிறைய பணமும் பெற்றிருக்கிறான். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது” என்று போலீசார் சொன்னதும், அந்த கிராமத்து தாயார் தலையில் அடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிட்டார்.

பிள்ளைகளை படிக்க அனுப்பும் தாய்மார்களே நீங்களும் இப்படி தலையில் அடித்துக்கொண்டு அழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இதை உங்கள் காதுகளிலும் போட்டுவைக்கிறோம்!

- உஷாரு வரும். 

Next Story