காட்பாடி அருகே பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: கட்டிட காண்டிராக்டர் கைது


காட்பாடி அருகே பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: கட்டிட காண்டிராக்டர் கைது
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 10:51 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான வழக்கில் கட்டிட காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார்.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. இவர் காந்திநகரில் பின்கு‌ஷன் மாண்டிசோரி இன்டர்நே‌ஷனல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்காக தற்போது காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் இடம்வாங்கி அங்கு புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி வருகிறார். கடந்த ஒருவருடமாக இந்த கட்டிட பணி நடைபெற்று வருகிறது.

விருதம்பட்டு பகுதியை சேர்ந்த நித்தியகுமார் என்ற காண்டிராக்டர் கட்டிடம் கட்டும் பணியை செய்துவந்தார். 2–வது மாடிவரை கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் முன்பகுதியில் போர்டிகோ கட்டும் பணி கடந்த 13–ந் தேதி நடைபெற்றது. 20–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 3.30 மணியளவில் திடீர் என்று போர்டிகோ பகுதி இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் காட்பாடி போலீசார், தீயணைப்பு வீரர்கள், வி.ஐ.டி.பேரிடர் மீட்புக்குழுவினர் சென்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 13 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்டவர்களில் 66புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற பாக்கியராஜ் (45) என்பவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.

ஒப்பந்ததாரர் கைது

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பள்ளி உரிமையாளர் பாலமுரளிகிருஷ்ணா, காண்டிராக்டர் நித்தியகுமார் ஆகியோர் மீது காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து காண்டிராக்டர் நித்தியகுமார் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் காண்டிராக்டர் நித்தியகுமார் பொன்னை அருகே பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதை அறிந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் பாண்டி விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த நித்தியகுமாரை நேற்று கைதுசெய்தார்.


Next Story