செங்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் டவுன் பஸ் சிறைபிடிப்பு


செங்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் டவுன் பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 10:56 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம்,

செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் 1,500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்து போனதன் காரணமாக கிணற்றில் குடிநீர் வற்றியது. இதனால் கடந்த சில மாதங்களாக வளையாம்பட்டு கிராமமக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இப்பகுதி மக்கள், பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்துள்ளனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த வளையாம்பட்டை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை காலிகுடங்களுடன் செங்கம் – தீத்தாண்டப்பட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கு வந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார்கள். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து டவுன் பஸ் விடுவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story