மேலகிருஷ்ணன்புதூரில் அம்மன் கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை


மேலகிருஷ்ணன்புதூரில் அம்மன் கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

மேலகிருஷ்ணன்புதூர் அம்மன் கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை அலார மின் இணைப்பை துண்டித்து மர்மஆசாமிகள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

மேலகிருஷ்ணன்புதூரில் பள்ளம் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் 2 வேளை பூஜைகள் நடத்தப்படுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கொடிமரம் அருகே ஒரு உண்டியலும், கோவிலுக்கு வெளியே காம்பவுண்டு சுவரில் ஒரு உண்டியலும் வைக்கப்பட்டு இருந்தது. கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை பூசாரி பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றார்.

கொள்ளை

இந்தநிலையில் நள்ளிரவு யாரோ சில மர்மஆசாமிகள் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். கொடிமரம் அருகே உண்டியலில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரத்தின் மின் இணைப்பை அவர்கள் துண்டித்துள்ளனர். பின்னர் அந்த உண்டியலை அலேக்காக தூக்கி கோவில் கலையரங்கத்தின் பின்பக்கம் கொண்டு சென்று உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர். இதேபோல் மற்றொரு உண்டியலையும் உடைத்து பணத்தை அள்ளி சென்றனர். மேலும் கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் புதிய பட்டுத்துணிகளையும் திருடி சென்றனர்.

நேற்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்–இன்ஸ்பெக்டர்கள் காந்தி, பாரத் லிங்கம் ஆகியோர் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story