கன்னியாகுமரி அருகே துணிகரம் மீனவர் வீட்டில் ரூ.11½ லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
கன்னியாகுமரி அருகே நள்ளிரவில் ஈஸ்டர் பிரார்த்தனைக்கு ஆலயத்துக்கு சென்ற நேரத்தில் மீனவர் வீட்டில் ரூ.11½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் டி.சி.நகர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரோசாரி (வயது 46). மீனவர். இவருடைய மனைவி நியோமி (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரோசாரி கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். வீட்டில் நியோமி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நியோமி தனது 2 மகள்களுடன் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பிரார்த்தனைக்காக அங்குள்ள புனித இன்னாசியார் ஆலயத்துக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மஆசாமிகள் நியோமியின் வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவினை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுவிட்டு அங்கிருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணைஇதற்கிடையே நேற்று அதிகாலை 2 மணிக்கு நியோமி பிரார்த்தனையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயற்சி செய்தார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் பின் பக்கம் சென்று பார்த்தார். அப்போது அங்கு கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 53¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11½ லட்சமாகும்.
இது குறித்து நியோமி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.