கீழக்கரையில் குண்டுமணி விதைகளை தின்ற வாலிபர் சாவு விஷ விதையை சோதித்து பார்த்த போது பரிதாபம்
கீழக்கரையில் விஷ விதையான குண்டுமணி விளையாட்டாக சோதித்து பார்ப்பதாக நினைத்து
கீழக்கரை,
கீழக்கரை 500 பிளாட் செய்யது அப்பா புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் பெற்றோருடன் சேர்ந்து சமையல் வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு விறகு எடுக்க சென்றபோது அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்த குண்டுமணிகள் சிலவற்றை எடுத்து வந்தாராம்.
அதனை வீட்டில் வைத்துவிட்டு ஓய்வு நேரங்களில் கைளில் வைத்து விளையாடிக்கொண்டிருப்பாராம். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் குண்டுமணி விதை விஷம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாத மணிகண்டன், குண்டுமணி விதையின் விஷத்தன்மையை சோதித்து பார்க்கப்போவதாக விளையாட்டாக கூறி வந்தார்.
சாவுஇந்தநிலையில் கடந்த 12–ந்தேதி வீட்டில் இருந்த மணிகண்டன் குண்டுமணி விதைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, அதை சோதித்து பார்க்க முழுங்கினாராம். அப்போது அவருக்கு ஒரு மாற்றமும் தென்படாததால், இரவு சாப்பிட்டு விட்டு படுக்க சென்றார். அப்போது திடீரென வாந்தி எடுத்தார். தொடர்ந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமானதால் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள் சில குண்டுமணிகளை மட்டும் வெளியே எடுத்தனர். மற்றவைகளை எடுக்க முடியவில்லை. இந்தநிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அவரின் தாய் பாக்கியம் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.