பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 3 இடங்களில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 3 இடங்களில்  குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 11:25 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 3 இடங்களில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் சுமார் 250–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் சீராக குடிநீர் வழங்க கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அரூர்–சேலம் சாலையில் புதுப்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜா, தங்கவேல் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தென்கரைக்கோட்டை

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வடகரை கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மின்மோட்டார் பழுதடைந்ததால் இந்த கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று பெண்கள் தண்ணீர் எடுத்து வந்ததால் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெண்கள் சீராக குடிநீர் வழங்க கோரி தென்கரைக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் அரூர்–தர்மபுரி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது ஒரு வாரத்தில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

இதேபோல் வடகரை கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் குடிநீர் வழங்க கோரி அரூர்– தென்கரைக்கோட்டை சாலையில் வடகரை பஸ் நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story