ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தர்மபுரி,

உலக மக்களின் பாவங்களை ஏற்றுக் கொண்ட ஏசு சிலுவையில் அறையப்பட்டார். 3–வது நாளில் அவர் உயிர்தெழுந்த நிகழ்வை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு ஈஸ்டர் பண்டிகை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரி தூயஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின்போது பங்கு தந்தை மதலைமுத்து ஏசு உயிர்தெழுந்து வந்தது குறித்த தகவலை கிறிஸ்தவர்களிடையே பகிர்ந்து கொண்டார். உதவி பங்கு தந்தை ஜான்பால் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கிறிஸ்தவர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் உதவி பங்கு தந்தை ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.ஐ. ஆலயம்

தர்மபுரி பெரியார் சிலை அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. போதகர் ஜவஹர் வில்சன் ஆசிர்டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி வெண்ணாம்பட்டி வேப்பமரத்துக்கொட்டாய் ஏ.ஜி. சபையில் பாதிரியார் சுந்தர்சிங் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதே போன்று கோவிலூரில் பங்குத்தந்தை அந்தோணிசாமி தலைமையிலும், செல்லியம்பட்டியில் பங்குத்தந்தை ஜார்ஜ் தலைமையிலும், அரூரில் பங்குதந்தை அருள்ராஜ் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. விடிய, விடிய நடைபெற்ற இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம்–பாலக்கோடு

காரிமங்கலம் ஒன்றியம் கேத்தனஅள்ளி திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் ஈஸ்டர் திருவிழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையை பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் பாதிரியார்கள் இருதயராஜ், அருளப்பன் ஆகியோர் நடத்தினார்கள். ஆலய வளாகத்தில் இறைவசனங்கள் வாசிக்கப்பட்ட பின்னர் ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்திகளை கைகளில் பிடித்து கொண்டு ஆலயத்திற்குள் சென்றனர். தொடர்ந்து ஈஸ்டர் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. முடிவில் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பாலக்கோடு கிறிஸ்து அரசர் தேவாலயம், சாவடியூர் அன்னை வேளாங்கண்ணி தேவலாயம் ஆகியவற்றில் பங்குத்தந்தை இருதயம் தலைமையிலும், தும்பலஅள்ளி அகதிகள் முகாமில் பாதிரியார் சூசைராஜ் தலைமையிலும் திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல் பொம்மிடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story