குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் அமைச்சர் பேச்சுவார்த்தை
கோபி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை கோபி – கொளப்பலூர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். எனினும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோபி–கொளப்பலூர் ரோட்டோரம் நின்று கொண்டிருந்தனர்.
அமைச்சர் பேச்சுவார்த்தைஅப்போது அந்த வழியாக காரில் வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்கள் நின்று கொண்டிருந்ததை கண்டதும் தனது காரை நிறுத்தினார்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் என்ன பிரச்சினை என்று கேட்டார். அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘உங்கள் பகுதிக்கு புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.