சின்னசேலம் அருகே விபத்து டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மரத்தின் மீது மோதியது; மாமியார்–மருமகள் பலி 7 பேர் படுகாயம்


சின்னசேலம் அருகே விபத்து டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மரத்தின் மீது மோதியது; மாமியார்–மருமகள் பலி 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 11:47 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மரத்தின் மீது மோதியது. இதில் மாமியார், மருமகள் பலியானார்கள்.

சின்னசேலம்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள சில்லால் அல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி முருகம்மாள்(வயது 50). இவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், முனுசாமி, மணிகண்டன் (25) ஆவார்கள். அரிகிருஷ்ணனின் மனைவி ரேகா(22).

தமிழ் புத்தாண்டான திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக முருகம்மாள், அவரது மகன்கள் முனுசாமி, மணிகண்டன், மருமகள் ரேகா, முனுசாமியின் மகன் போத்திராஜ்(22), உறவினர்கள் மயில்முருகன் மகள் நவீனா(20), தேவேந்திரன் மகள் பூர்ணி(18), கிருஷ்ணமூர்த்தி மகள் நந்தினி(18) ஆகியோர் ஒரு வாடகை காரில் சென்றனர். காரை மோட்டாஸ் குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அசோக்குமார்( 34) என்பவர் ஓட்டினார்.

கார் டயர் வெடித்தது

கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர்,அங்கிருந்து அதே காரில் ஊருக்கு திரும்பினார்கள். கார் சிதம்பரம்–சேலம் சாலையில் வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே குரல் கிராமம் பிரிவு ரோடு அருகே வந்த போது, திடீரென காரின் முன்பக்கத்தில் இடதுபுறம் இருந்த டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் டிரைவர் அசோக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாட்டிற்குள் சிக்கி முருகம்மாள், ரேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த முனுசாமி, மணிகண்டன், போத்திராஜ், நவீனா, பூர்ணி, நந்தினி, அசோக்குமார் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பலியான முருகம்மாள், ரேகா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்ப்புத்தாண்டில் கோவிலுக்கு சென்று, திரும்பிய போது விபத்தில் சிக்கி மாமியார், மருமகள் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story