கடலூரில் 105.8 டிகிரி வெயில் கொளுத்தியது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி


கடலூரில் 105.8 டிகிரி வெயில் கொளுத்தியது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 11:50 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நேற்று 105.8 டிகிரி வெயில் கொளுத்தியது.

கடலூர் முதுநகர்,

கடலூரில் தற்போது கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் நேற்றும் கடுமையாக இருந்தது. அதிகாலையில் சூரிய ஒளி உடலில் பட்டதும் வெயில் சுள்ளென சுடுவதை உணர முடிகிறது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கமும் அதிகரித்தது.

கடலூரில் நேற்று அதிகபட்சமாக 105.8 டிகிரி வெயில் பதிவானது. வெயிலுக்கு அஞ்சி பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் கடலூர் நகர சாலைகளில் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. பாதசாரிகள் கையில் குடைபிடித்துக்கொண்டும், தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் செல்வதை பார்க்க முடிந்தது. அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் தலையில் தொப்பி அணிந்தும், ஈரமான துணிகளை தலையில் போர்த்திக்கொண்டும் சென்றனர்.

அனல் காற்று வீசியது

அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் இளநீர், மோர், கரும்புசாறு, சர்பத் மற்றும் குளிபானங்கள் ஆகியவற்றை பருகியும், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டும் தாகத்தை தணித்துக்கொண்டனர்.

இது குறித்து கடலூர் வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலமுருகன் கூறுகையில், கடலூரில் இந்த ஆண்டு முதல் முறையாக 105.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. அதிலும் ஏப்ரல் மாதத்தில் இந்த அளவுக்கு வெயில் பதிவாகி இருப்பது இதுவே முதல் முறை. வங்கக் கடலில் அந்தமான் தீவு அருகே உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் சுற்றியுள்ள ஈரப்பதத்தை ஈர்த்துச் செல்வதால் அடுத்த சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இதே நிலையில் நீடிக்கும். மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.

சில்வர் பீச்சில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

மாலை 4 மணிக்கு மேல் வெயிலின்தாக்கம் குறைந்தது. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடந்தவர்கள் மாலையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள சில்வர் பீச்சுக்கு சென்றனர். இதனால் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது. அங்கு பலர் குளித்தும், கால்களை நனைத்தும் மகிழ்ந்தனர். கடற்கரையோரம் அமர்ந்து கடல் அலையை கண்டு ரசித்தனர்.


Next Story