வீடுகளை சூறையாடியவர்களை கைது செய்ய கோரி சித்தரசூர் கிராம மக்கள் சாலை மறியல்
வீடுகளை சூறையாடியவர்களை கைது செய்ய கோரி, சித்தரசூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே உள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்த சிலர் கடந்த 14–ந்தேதி இரவு சித்தரசூர் கிராமத்திற்கு வந்து, அங்கிருந்த தெரு மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர். இதை பார்த்த கிராமத்து மக்கள் அவர்களிடம் தட்டிக்கேட்டனர். இதன் பின்னர் அங்கிருந்து சென்ற, பாலூர் கிராமத்தை சேர்ந்த அந்த நபர்கள் மறுநாள்( அதாவது நேற்று முன்தினம்) மீண்டும் சித்தரசூர் கிராமத்திற்கு வந்து, அங்குள்ள பாஸ்கர், நாராயணசாமி, குணசேகரன் ஆகியோரது வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்இந்த சம்பவம் தொடர்பாக இவர்கள் 3 பேரும் நெல்லிக்குப்பம் போலீசில் பாலூர் நடுக்காலனியை சேர்ந்த துரை உள்பட சிலர் மீது புகார் செய்தனர். இந்த நிலையில், தாங்கள் அளித்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதை கண்டிக்கும் வகையிலும், வீடுகளை சூறையாடியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கிராமத்து மக்கள் சித்தரசூரில் மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து பாலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம், இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து மனு அளிப்போம் என்று தெரிவித்தார். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.