தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் 3 நாட்களில் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் 3 நாட்களில் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி நகரில் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி,

தமிழகத்தில் கடந்த 14–ந்தேதி தமிழ்புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதேபோல் கேரளாவிலும் விசு பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டு இருந்தது. புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால், இருமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் ஊட்டியில் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் காரணமாக ஊட்டி நகரம் களை கட்டி காணப்பட்டது. படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

ஒரே நாளில் 24 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் மட்டும் 24 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கடந்த 14–ந்தேதி 15 ஆயிரத்து 971 பேரும், நேற்று 20 ஆயிரம் பேர் என கடந்த 3 நாட்களில் மட்டும் 60 ஆயிரத்து 571 பேர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை காண குவிந்தனர்.

இதேபோல் ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த 14–ந்தேதி 11 ஆயிரத்து 366 சுற்றுலா பயணிகளும், நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 231 பேரும், நேற்று 12 ஆயிரம் பேர் என கடந்த 3 நாட்களில் மொத்தம் 39 ஆயிரத்து 597 சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக படகு இல்லம் நிரம்பியது. இதனால் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

படகு இல்லத்தில் இருந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரம் வரை பிடித்தது. போக்குவரத்தை சீரமைக்க தாவரவியல் பூங்கா சாலை, அரசு கலைக்கல்லூரி சாலை, சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இடமின்றி சிரமம் அடைந்தனர்.

பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

தொடர் விடுமுறை காரணமாக கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையத்துக்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக சுற்றுலா பயணிகள் அலைமோதினர்.

கோவை, மேட்டுப்பாளையத்துக்கு சென்ற பஸ்களில் படிக்கட்டில் தொங்கியப்படியே பயணிகள் சென்றனர். இது குறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறும் போது:–

தொடர் விடுமுறை காலங்களிலாவது ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை விட அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலா வந்து விட்டு குடும்பத்துடன் எப்படி ஊர் போய் சேருவது என்று ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் புலம்ப தொடங்கி விட்டார்கள். தற்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. எனவே கோவை–ஊட்டிக்கு சிறப்பு பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story