மசினகுடி–மாயார் சாலையை கடந்து செல்லும் யானைகள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை
மசினகுடி–மாயார் சாலையை காட்டு யானைகள் கடந்து செல்கின்றன.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவ மழை முற்றிலுமாக பொய்த்து போனது. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள புற்கள். மரம், செடி, கொடிகள் அனைத்து தாவரங்களும் காய்ந்து கருகி போனது. நீர் நிலைகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன.
இதனால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்த பெரும்பாலான வனவிலங்குகள் நீர்நிலைகளை நோக்கி இடம் பெயர்ந்து சென்றன. வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பசுமைக்கு திரும்பும் முதுமலைஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் மழை பலத்த மழை பெய்தது. மசினகுடி, மாயார், தெப்பக்காடு, தொரப்பள்ளி என புலிகள் காப்பகத்தின் அனைத்து வன பகுதிகளிலும் இந்த மழை பெய்ததால் வறட்சியின் தாக்கம் சற்று குறைந்தது. அத்துடன் பட்டுபோய் காட்சியளித்த வனப்பகுதி பலத்த மழையால் மீண்டும் பசுமைக்கு திரும்ப தொடங்கி உள்ளன. புற்களும் வளர தொடங்கி உள்ளன.
ஒரு சில நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனம் மற்றும் குடிநீர் உள்ளது. எனவே முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்ற யானை போன்ற வனவிலங்குகள் மீண்டும் வரத்தொடங்கி உள்ளன. இதனால் மசினகுடி – மாயார் சாலை மற்றும் தெப்பக்காடு – தொரப்பள்ளி சாலையில் யானைகள் கூட்டத்தை காலை மற்றும் மாலை நேரங்களில் பார்க்க முடிகிறது.
வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைஇது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சமீபத்தில் பெய்த மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பல இடங்களில் புற்கள் முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் வேறு இடங்களுக்கு உணவு, தண்ணீர் தேடி சென்ற வனவிலங்குகள் இப்போது முதுமலை வனப்பகுதிக்கு வர தொடங்கி உள்ளன. குறிப்பாக மசினகுடி–மாயார் சாலை, தெப்பக்காடு–தொரப்பள்ளி சாலையில் யானைகள் கடந்து செல்வதை பார்க்கலாம். எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும். காட்டு யானைகள் சாலையை கடந்தால் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனத்தை நிறுத்தி என்ஜின் இயக்கத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். யானைகள் கடந்து சென்று விட்டதா? என்பதை உறுதி செய்த பின்னர் வாகனத்தை இயக்கி சாலையை கடக்கலாம். அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் போது வனவிலங்குகளுக்கு எரிச்சலுட்டும் விதத்தில் அடிக்கடி ஏர்ஹாரன்களை உபயோகப்படுத்த வேண்டும். தேவைப்படும் சமயத்தில் ஏர்ஹாரனை உபயோகப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வாகன ஓட்டிகள் வனத்துறையினரின் அறிவுரைகளை பின்பற்றுகிறார்களா? என்பதை அவ்வப்போது வனத்துறையினர் ரோந்து வாகனம் மூலம் கண்காணிக்கிறார்கள்.