குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 71 அடி உயரமுள்ள அணையில் தற்போது 24 அடி வரையே தண்ணீர் உள்ளது. மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காகவும், சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காகவும் வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது.
இதில் 32 கனஅடி தண்ணீர் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்கும், 8 கனஅடி தண்ணீர் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பரிசீலனை செய்யப்படும்இதையடுத்து மதுரை மாவட்டத்துக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் அனைத்து தரப்பு மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வைகை அணையில் ஏற்கனவே நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் அணையில் உள்ள தண்ணீரையே குடிநீராக பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். இருந்த போதிலும் மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுப்போம் என்றனர்.