திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 17 April 2017 5:00 AM IST (Updated: 17 April 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரத்தில் 2–வது ரெயில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் அமைந்துள்ளது. இந்த கடை மாநில நெடுஞ்சாலையான பகுதியில் இருப்பதாகவும், எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் அந்த டாஸ்மாக் கடை இதுவரை அகற்றவில்லை. அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி 16–ந்தேதி காலையில் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்து இருந்தனர்.

சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த டாஸ்மாக் கடையை சுற்றி இரும்பு தடுப்புகள் கொண்டு வேலி அமைத்து இருந்தனர். அத்துடன் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை தலைமையில் 200–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன் குவிந்தனர். பின்னர் அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து, திருப்பூர் தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாகவும், மாநில நெடுஞ்சாலை அருகிலும் உள்ள இந்த டாஸ்மாக் கடையை இதுவரை ஏன் மூடவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு டாஸ்மாக் உதவி மேலாளர், “நெடுஞ்சாலைக்கும், டாஸ்மாக் கடைக்கும் இடையே ரெயில்வே தண்டவாளம் செல்வதால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இந்த கடைக்கு பொருந்தாது என்றும், பள்ளிகள், வழிபாட்டு தலங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் தான் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது” என்றும் கூறினார்.

3 மாத அவகாசம்

உடனே பொதுமக்கள், இந்த கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள டாஸ்மாக் பாரின் சமையல் அறையையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து 6 மாத காலத்துக்குள் அந்த கடையை அப்புறப்படுத்திக்கொள்கிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் பொதுமக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், 3 மாத காலத்துக்குள் அந்த கடையை அகற்றிக்கொள்கிறோம் என்று உதவி மேலாளர் தனது கைப்பட எழுதி உத்தரவாதம் கொடுத்தார். மேலும், அங்கிருந்த ஆக்கிரமிப்பை பார் உரிமையாளர் உடனே அப்புறப்படுத்தவும், தாசில்தார் உத்தரவிட்டார். இதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story