குடிமங்கலம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம்


குடிமங்கலம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம்

குடிமங்கலம்,

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வரும் அவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை அடுத்த விருகல்பட்டிபுதூர் நால்ரோட்டில் விவசாயிகள் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறியதாவது “ ஊருக்கே சோறு போடும் உழவனின் குடும்பம் இன்று சோற்றுக்கு திண்டாடும் நிலை உள்ளது. இன்று ஏற்பட்டுள்ள கடும் வறட்சிக்கு காரணம் மழையின்மை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் மழையில்லாமல், தண்ணீரில்லாமல் பயிர்களை பறிகொடுத்து விட்டு நிற்கும் விவசாயிகளின் உயிரிழப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணம்

எங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமூர்த்தி அணையை தூர்வாரி கிடைக்கும் நீரை அதிக அளவில் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும். பி.ஏ.பி. கால்வாய்களை முறையாக பராமரித்து கடைமேடை வரை தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் வறட்சியின் காரணமாக பயிர்கள் வாடியதால் மனம் உடைந்து மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கூறினர்.

Next Story