கவர்னர் கிரண்பெடி தனது வரம்பிற்குள் செயல்பட்டால் நல்லது புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி மதுரையில் பேட்டி
கவர்னர் கிரண்பெடி தனது வரம்பிற்குள் செயல்பட்டால் நல்லது என்று புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி மதுரையில் கூறினார்.
மதுரை,
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விவசாயிகள் கடன் தள்ளுபடிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது. விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும். புதுச்சேரியில் கூட்டுறவு கடன்களை ரத்து செய்துள்ளோம். விவசாய கடன்களை ரத்து செய்ய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாய கடன்களை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் மத்திய அரசு இதற்கு நிதி வழங்காது என மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.
விவசாய கடன்ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான பொதுமக்களின் போராட்டம் நியாயமானது. எரிவாயு திட்டத்தை காரைக்காலில் தனியார் பங்களிப்புடன் அமைக்க மத்திய அரசு திட்டமிட்ட போது, நான் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியிடம் வேண்டாம் என வலியுறுத்தினேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலன் பாதிக்கப்படும். நீட்தேர்வு விஷயத்தில் தமிழக அரசுக்கு விதிவிலக்கு தரமுடியாது என மத்திய அரசு அறிவித்திருப்பது வேதனையாக இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் தான் நீட் தேர்வு இருக்கும். எனவே நமது கிராமபுற மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். அவர்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்திற்கு மாறும் வகையில் நீட் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் விதி விலக்கு தர வேண்டும்.
இது தொடர்பாக சட்டம் நிறைவேற்றுதல் சம்பந்தமான கருத்துருவை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளேன். தமிழக அரசு ஏற்கனவே இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. ஆனாலும் மத்திய அரசு நீட் தேர்வு விசயத்தில் விடாப்பிடியாக இருப்பது வேதனை அளிக்கிறது.
மீனவர்கள் பிரச்சினைதமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் துன்புறுத்துவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. சமீபத்தில் காரைக்கால் பகுதி மீனவர்கள் போதைபொருள் கடத்தியதாக போலியாக வழக்குப்பதிவு செய்து, இலங்கை கடற்படையினர் சிறையில் அடைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கும் வகையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். தமிழக–புதுச்சேரி மீனவர்கள் பிரச்சினையை பொறுத்தவரை, மத்திய–மாநில அரசுகள் மற்றும் இலங்கை அரசு ஆகியோர் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள், கவர்னர் கிரண் பெடியுடனான மோதல் போக்கு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘‘மத்திய–மாநில அரசுகளில் நீதித்துறை, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றை பொறுத்தவரை அதிகாரிகள் உரிய வரம்பிற்குட்பட்டு செயல்பட வேண்டும் என சட்டத்தில் சரத்துகள் உள்ளன. இதன் அடிப்படையில் அவரவர் வரம்பிற்குள் செயல்பட்டால் நல்லது. அதை மீறி செயல்பட்டால்தான் பிரச்சினை வருகிறது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. 3 அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்தோ, தமிழக அரசு பற்றியோ எதுவும் பேச விரும்பவில்லை‘‘ என்றார்.