ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு: லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஒட்டன்சத்திரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 17–வது வார்டு லட்சுமிநகரில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு அந்த பகுதியில் 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆழ்துளை கிணறுகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 16–வது வார்டு மக்களுக்கு வினியோகம் செய்வதற்காக லட்சுமிபுரம் மயானம் அருகே புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதையொட்டி நேற்று லாரி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் அங்கு ஆழ்துளை கிணறு அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தால் எங்கள் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 4 ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என்று கூறி லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைஇதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பொதுமக்கள் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தனர்.
இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கைவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.