கொடைக்கானலில் ஐஸ்கட்டி மழை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


கொடைக்கானலில் ஐஸ்கட்டி மழை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் ஐஸ்கட்டி மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குளு, குளு சீசன் வழக்கமாக ஏப்ரல் மாதம் 2–வது வாரம் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி முதல் வானில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்தது. இதனால் இதமான சூழ்நிலை நிலவியது. அதனைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதியில் மதியம் 1 மணி முதல் 1.15 மணி வரை ஐஸ்கட்டி மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஐஸ்கட்டிகள் புல்வெளிகள், சாலைகளில் விழுந்தன.

மேலும் சாலைகளில் சென்ற வாகனங்கள் மீதும் கல் விழுந்ததுபோல் ஐஸ்கட்டிகள் விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஐஸ்கட்டியை சுற்றுலா பயணிகள், சிறுவர்கள் ஆர்வமுடன் எடுத்து பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இதைத்தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை சாரல் மழை பெய்தது. கடும் வெப்பம் நிலவி வந்தநிலையில் சாரல் மழை பெய்ததால் இதமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்ய தொடங்கியுள்ளதால் சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா இடங்கள் களை கட்டியது. சாரல்மழையில் நனைந்தபடியே சுற்றுலாபயணிகள், சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். மேலும் படகுசவாரி செய்தும் மகிழ்ந்தனர். சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story