திண்டுக்கல் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தபால்நிலைய அதிகாரி பலி
திண்டுக்கல் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் தபால்நிலைய அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
தாடிக்கொம்பு,
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30 ). அவருடைய மனைவி சுஜிதா. இவர்களுக்கு பரத்வாஜ் (7) என்ற மகன் உள்ளார். சுரேஷ், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த நத்தப்பட்டி கிளை தபால் நிலைய அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர், வேடசந்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
வாரவிடுமுறை நாட்களில் மட்டும் அவர், தனது சொந்த ஊரான மயிலாடும்பாறைக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேடசந்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மயிலாடும்பாறைக்கு சென்று கொண்டிருந்தார்.
போலீசார் விசாரணைதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுரேஷ் சாலையோரத்தில் உள்ள மழைநீர் கால்வாயில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.