உசிலம்பட்டி அருகே ஏ.கிருஷ்ணாபுரத்தில் ஜல்லிக்கட்டு


உசிலம்பட்டி அருகே ஏ.கிருஷ்ணாபுரத்தில் ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 17 April 2017 4:45 AM IST (Updated: 17 April 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.கிருஷ்ணாபுரத்தில் ஜல்லிக்கட்டில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏ.கிருஷ்ணாபுரத்தில் முனியாண்டி கோவில் திருவிழா நடைபெற்றது. இதனை யொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா தலைமை தாங்கி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார். பேரையூர் தாசில்தார் சிவக்குமார், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர். சில காளைகள் மாடு பிடிவீரர்களுக்கு சவால் விடும் வகையில் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பிடியில் சிக்காமல் கம்பீரமாக பாய்ந்து சென்றன.

பரிசுப் பொருட்கள்

போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் கிராமத்தின் சார்பில் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க காசுகள், மிக்சி, கிரைண்டர், குத்துவிளக்கு, அண்டா, பித்தளை, சில்வர் பாத்திரங்கள் என பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மவர்மன், பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) முருகன், இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

போட்டியில் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சேடபட்டி, டி.ராமநாதபுரம் ஆகிய துணை சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவர்கள் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர்.

Next Story