மைசூருவில், வெப்பமான பகுதிக்கு சென்ற தனியார் பள்ளி மாணவன் உடல் வெந்து பலி


மைசூருவில், வெப்பமான பகுதிக்கு சென்ற தனியார் பள்ளி மாணவன் உடல் வெந்து பலி
x
தினத்தந்தி 17 April 2017 1:49 AM IST (Updated: 17 April 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில், வெப்பமான பகுதிக்கு சென்ற தனியார் பள்ளி மாணவன் உடல் வெந்து பலியானான். இதுகுறித்து அறிந்த தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மைசூரு,

மைசூருவில், வெப்பமான பகுதிக்கு சென்ற தனியார் பள்ளி மாணவன் உடல் வெந்து பலியானான். இதுகுறித்து அறிந்த தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

குப்பை மேடு

மைசூரு மாவட்டம் பெலட்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி ஜானகி. இவர்களது மகன் ஹர்‌ஷல்(வயது 16). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலையில் இவன், அப்பகுதியில் ரிசர்வ் வங்கியின் பின்புறம் அமைந்துள்ள குப்பை மேட்டிற்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றான். அப்போது அந்த குப்பை மேட்டில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.

அதை கவனிக்காமல் சிறுவன் ஹர்‌ஷல் குப்பை மேட்டில் ஏறியுள்ளான். அப்போது திடீரென அந்த குப்பை மேட்டில் சூடு அதிகரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவன், குப்பை மேட்டில் இருந்து இறங்க முயன்றான். ஆனால் அதற்குள் அவனுடைய கைகள், கால்கள், உடல் ஆகியவை வெந்தது.

சிறுவன் பலி

இதனால் அவன் அங்கேயே மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் ஹர்‌ஷல் பலியானான்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஹர்‌ஷலின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஹர்‌ஷலின் உடலைப் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

கொதி நிலையை...

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தாசில்தார் ரமேஷ் பாபு மற்றும் மேட்டுஹள்ளி போலீசாருக்கு தெரியவந்தது. தகவல் அறிந்த தாசில்தாரும், போலீசாரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதாகவும், அதனால் அந்த குப்பை மேடு பகுதி மிகவும் வெப்பமான நிலையை அடைந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story