குழாய்களை தேடி குடங்களுடன் படையெடுத்து செல்லும் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் தவியாய் தவிப்பு
வரலாறு காணாத வறட்சியால் குழாய்களை தேடி தண்ணீர் குடங்களுடன் மக்கள் செல்லும் நிலை உள்ளதுடன் தண்ணீர் பஞ்சத்தால் தவியாய் தவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
மணப்பாறை,
விளை நிலங்கள் எல்லாம் பாலை வனம் போல் காட்சி தருகின்றது. பசுமை போர்த்தியது போல் இருக்க வேண்டிய மரங்கள் எல்லாம் காய்ந்து நிற்கிறது. நிரம்பி வழிய வேண்டிய குளங்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஆழ்குழாய் கிணறுகள் எல்லாம் வற்றிப் போய் விட்டது.
சுமார் 100 ஆண்டுகள் இல்லாத அளவு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதற்கு, எந்த ஆண்டும் இல்லாத அளவு கடந்த ஆண்டு பருவமழை குறைவு போன்ற அடுக்கடுக்கான காரணங்கள் கூறலாம். இனிவரும் கத்தரிவெயிலை தண்ணீர் இன்றி எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் வருத்தத்தில் உள்ளனர் மக்கள்.
தண்ணீர் பஞ்சம்திருச்சி மாவட்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் 88 ஊராட்சிகள் உள்ளது. இதுமட்டுமன்றி துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி, 27 வார்டுகள் கொண்ட மணப்பாறை நகராட்சியும் உள்ளது. மணப்பாறை தொகுதியை பொறுத்தவரை வறட்சிப்பகுதியாக இருந்தாலும் கூட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பின்னர் மக்கள் சற்று தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பிக் கொண்டனர். ஆனால் தற்போது மீண்டும் தலைக்கி தாண்டமாடுகிறது தண்ணீர் பஞ்சம்.
சுமார் 1000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் இல்லாத நிலையில் கிராம மக்கள் 24 மணி நேரமும் தண்ணீர் குடத்துடன் எந்த குழாயில் தண்ணீர் வருகிறது என்று தேடிக் கொண்டே அலையும் பரிதாப நிலை தான் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு முன்னரும், சென்று வந்த பின்னரும் படிப்பதற்கு நேரம் இருக்கின்றதோ இல்லையோ தண்ணீர் எடுக்க செல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு கடும் மனவேதனைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர். 3 ஒன்றியங்களிலும் உள்ள அதிக அளவிலான கிராமங்களில் இதே நிலை தான்.
மக்கள் தவிப்புஇதுமட்டுமின்றி பல்வேறு தொழிலுக்கு செல்வோரின் நிலையும் பரிதாபமாகத்தான் உள்ளது. எந்த நேரமாக இருந்தாலும் தண்ணீர் பிடிப்பது தான் முதல் பணியாக கொண்டுள்ளனர். ஒரு சில கிராமங்களில் ஒரு ஆழ்குழாய் கிணறுகளில் தான் தண்ணீர் வருகின்றது. அதுவும் குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குடம் வந்தாலே அரிது தான். காவிரி குடிநீர் என்பது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வரும் ஆனால் சிறிது நேரத்தில் நின்று விடும். கோடைகாலம் தற்போது தான் துவங்கி உள்ள நிலையில் இனி வரும் நாட்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் தவிக்கின்றனர் மக்கள்.
ஒரு குழாயில் நூற்றுக்கணக்கான குடங்களை வைத்து மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஒருபுறம், குடிநீர் குழாயைத் தேடி சில கிலோ மீட்டர் தூரம் மக்கள் அலைந்து செல்வது மறுபுறம். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழிந்தோடும் நீரை வீணாமல் பிடித்து பயன்படுத்தி வரும் மக்கள் கூட்டம் மற்றொரு புறம் இப்படியாக பல்வேறு நிலைகளில் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தினமும் பல்வேறு இடங்களிலும் மக்கள் காலிக்குடங்களுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தண்ணீருக்காக போராட்டம் நடத்தாத நாட்களே இருக்க முடியாது என்ற நிலை உள்ளது.
கோரிக்கைஇதெல்லாம் இருக்க பல்வேறு இடங்களிலும் காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரை சிலர் விவசாயத்திற்கும், சில இடங்களில் வீணாக செல்லும் நிலையும் தொடர்ந்து நீடித்து தான் வருகின்றது. இப்போதுள்ள வறட்சிக்கு வீணாகும் நீரை சரிசெய்து மக்களுக்கு வழங்கினால் ஓரளவு குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியும். ஆனால் அதைப் பற்றி குடிநீர் வடிகால் வாரியம் கண்டு கொள்வதில்லை.
சில இடங்களில் தண்ணீர் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் கூடுதல் குழாய்கள் இறக்குவது கிடையாது, மின்மோட்டார்கள் கிடையாது இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே நிலவுகிறது. புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்றால் அந்த இடத்தை முறையாக தேர்வு செய்யாத நிலையில் ஆழ்குழாய் கிணறும் வீணாக போய் விடுகின்றது. ஆகவே இந்தகோடையை மக்கள் தண்ணீர் பிரச்சனையின்றி சமாளித்திட ஏதுவாக பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குழாய்களை சரிசெய்து அந்த நீரை மக்களுக்கு வழங்கிட வேண்டும், தண்ணீர் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் கூடுதல் பைப்கள் இறக்கி மின் மோட்டார் மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் போது நீரோட்டம் உள்ள பகுதியை முறையாக தேர்வு செய்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.