புதுவையில் 104 டிகிரி பதிவானது


புதுவையில் 104 டிகிரி பதிவானது
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நேற்று 103.82 டிகிரி வெயில் அளவு பதிவானது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் வேளையில் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் கையில் குடை பிடித்தபடியும், துணியால் முகத்தை மூடியபடியும் செல்கிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலையில் தொப்பி அணிந்தும், கண்ணாடிகள் அணிந்தபடியும் செல்வதையும் பார்க்க முடிகிறது.

வெயில் காரணமாக வீடுகளிலேயே மக்கள் முடங்கி விடுவதால் பகல் நேரங்களில் பெரும்பாலான தெருக்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கடற்கரை சாலையில் ஆள்நடமாட்டம் இன்றி கிடந்தன.

103.82 டிகிரி...


புதுவையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருந்து வருகிறது. நேற்றும் இதேபோன்ற நிலை நீடித்தது. இதனால் அனல் காற்று வீசியது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின்போது மட்டுமே புதுவையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகும். ஆனால் நேற்று புதுவையில் 103.82 டிகிரி (39.9 செல்சியஸ்) வெயில் அளவு பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளதால் கோடைமழை பெய்யாதா? என்று பொதுமக்களை ஏக்கமடையச் செய்துள்ளது.

அணிவகுத்த வாகனங்கள்


மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்தவுடன் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் காற்று வாங்க கடற்கரைக்கு படையெடுத்து வந்தனர். அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

இதனால் புதுவை கடற்கரையையொட்டி உள்ள சாலைகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


Next Story