தொழிலதிபர்களை மிரட்டிய வழக்கு: மர்டர் மணிகண்டன் கூட்டாளி கைது


தொழிலதிபர்களை மிரட்டிய வழக்கு: மர்டர் மணிகண்டன் கூட்டாளி கைது
x
தினத்தந்தி 17 April 2017 3:45 AM IST (Updated: 17 April 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மர்டர் மணிகண்டன் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் இருந்து ரவுடிகள், புதுவையில் உள்ள தொழிலதிபர்களை செல்போன் மூலமாக மிரட்டி பணம் பறிப்பதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி மர்டர் மணிகண்டன் வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவருடன் பாதுகாப்புக்கு வரும் ஐ.ஆர்.பி. ஏட்டு ஒருவரின் செல்போனை வாங்கி தனது கூட்டாளிகளை தொடர்பு கொண்டு தொழிலதிபர்களை மிரட்டியது தெரியவந்தது.

ரகசிய தகவல்


அதையடுத்து ரவுடி மர்டர் மணிகண்டன் மீது தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு போடப்பட்டது. அவருடைய கூட்டாளிகள் ஏழுமலை, சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ரவுடி மர்டர் மணிகண்டனுக்கு செல்போன் வழங்கிய ஐ.ஆர்.பி. ஏட்டு சண்முகவேல் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய வாணரபேட்டையை சேர்ந்த தண்டபாணி, அய்யப்பன், ரவி ஆகியோர் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தண்டபாணி சேதராப்பட்டு பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

கூட்டாளி கைது


உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தண்டபாணியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அய்யப்பன், ரவி ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


Next Story